ADDED : ஜூலை 04, 2024 01:47 AM
மதுரை: மதுரையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண் துணை இயக்குநர் அமுதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தங்கள் பகுதிக்கு பரிந்துரைக்கப்பட்ட குறுகிய அல்லது மத்தியகால ரகங்கள், வீரிய ஒட்டு, நாட்டு ரகங்களை விற்பனையாளரிடம் ரசீதுடன் வாங்கிய பின் விதைக்க வேண்டும். காலம் கடந்த விதைப்பை தவிர்ப்பதன் மூலம் காய்ப்புழுக்களின் பாதிப்பை குறைக்கலாம்.
வேளாண்மை பல்கலை பரிந்துரைத்த பயிர் இடைவெளி, வரிசை இடைவெளியை பின்பற்றி பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். பயிரின் தேவைக்கு மேல் தழைச்சத்து உரம் கிடைத்தால் தாவர வளர்ச்சி அதிகரித்து மகசூல் குறைந்து விடும்.
ஏற்கனவே புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பருத்தி வயலில் நடப்பு பருவத்திலும் தாக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. தாய் அந்து பூச்சிகளின் நடவடிக்கையை கண்காணிக்க எக்டேருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகளை நடவு செய்த 45வது நாளில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
பூக்கும், காய்பிடிக்கும்பருவத்தில் புழுக்கள் இருந்தால் கையால் சேகரித்து அழிக்க வேண்டும். விதைத்த 120 அல்லது அதற்கு முந்தைய நாட்களில் வெள்ளை ஈ, அசுவினி தாக்குதல் தென்பட்டால் பைரித்ராய்டு அல்லது பூச்சிக்கொல்லி மருந்துகளின் கலவையை தெளிக்கக்கூடாது என்றார்.