ADDED : ஆக 31, 2024 05:49 AM
உசிலம்பட்டி,: உசிலம்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணைத்தலைவர் தேன்மொழி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். சிறப்பு பார்வையாளராக எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்றார்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிக்காக சந்தை திடல் நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூடுதல் இடத்தை பெறுவதில் ஏன் இவ்வளவு தாமதமாகிறது. இதற்கான பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடம் முறையிட்டு விரிவாக்கப்பணிகளை விரைவில் நிறைவேற்றித்தர வேண்டும்' என்றனர்.
தெருக்களில் சாலை வசதி, மழைநீர் வடிகால் அமைக்கும் போது ஆக்கிரமிப்புகளை அளந்து அகற்றியபின் தான் அமைக்க வேண்டும். நகராட்சி வளர்ச்சிப்பணிகளுக்கு எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.