/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்
/
விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்
ADDED : செப் 03, 2024 05:52 AM
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் விமானப்படைக்கு சொந்தமான, 'மிக் - 29' ரக போர் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கு முன்னதாக விமானத்தில் இருந்து பைலட் குதித்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில், விமானப்படைக்கு சொந்தமான மிக் - 29 ரக போர் விமானம் நேற்று இரவு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தில் இருந்து பாராஷூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.
இதையடுத்து, விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. அது, குடியிருப்புக்கு தொலைவில் விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது பற்றி அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும், கரடு முரடான பாதை காரணமாக விபத்து நடந்த இடத்தை அடைய முடியவில்லை என போலீஸ் எஸ்.பி., தெரிவித்தார்.