/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'டப்பா டக்கர்' : அரசு பஸ்களில் 'சீட்' இருக்கு... ஆனா இல்ல: ஓட்டம் இருக்கு... ஆனா பாதுகாப்பு இல்லை...
/
'டப்பா டக்கர்' : அரசு பஸ்களில் 'சீட்' இருக்கு... ஆனா இல்ல: ஓட்டம் இருக்கு... ஆனா பாதுகாப்பு இல்லை...
'டப்பா டக்கர்' : அரசு பஸ்களில் 'சீட்' இருக்கு... ஆனா இல்ல: ஓட்டம் இருக்கு... ஆனா பாதுகாப்பு இல்லை...
'டப்பா டக்கர்' : அரசு பஸ்களில் 'சீட்' இருக்கு... ஆனா இல்ல: ஓட்டம் இருக்கு... ஆனா பாதுகாப்பு இல்லை...
ADDED : மே 02, 2024 05:32 AM

மதுரை: மதுரை மண்டலத்தில் ஓடும் பெரும்பாலான அரசு பஸ்கள் 'டப்பா'வாக இருந்தாலும் 'டக்கராக' ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் அவை பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. பல பஸ்கள் ஓட்டை உடைசலாக மிரட்டிக்கொண்டிருக்கின்றன .
'இப்படி ஓட்டை உடைசலா இருந்தா நாங்க எப்படி தான் நிம்மதியாக ஊர் போய் சேர முடியும்' என மதுரை பயணிகள் அச்சப்படுகின்றனர். பஸ் பயணம் நிம்மதியாக, சவுகரியமாக இருக்கிறதா எனக் கேட்டால் கேள்விக்குறி தான்.
நேற்று கூட நீலகிரி மாவட்டம் குன்னுாரில் அரசு பஸ் படிக்கட்டு உடைந்தது. கடந்தமாதம் முதுகுளத்துார் பகுதியில் அரசு பஸ்சின் படிக்கட்டுகள் 'கட்' ஆகி விழுந்தது. தொடரும் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த போக்குவரத்து துறை, உடனடியாக அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
நாமும் மதுரை ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்டில் களஆய்வு செய்தபோது பல பஸ்களில் இருக்கைகள் இல்லை. சில இருக்கைகளை யாரும் எடுத்துச்சென்றுவிடக்கூடாது என பாதுகாப்பாக கயிறு கட்டி வைத்துள்ளனர். ஜன்னல் கம்பிகளை காணவில்லை. ஒருவேளை படிக்கட்டுகளில் தொங்கி பயணிப்பவர்கள் ஜன்னல் கம்பிகளை பிடிக்கக்கூடாது என்பதற்காக எடுத்துவிட்டார்களா எனத்தெரியவில்லை. ஆனாலும் இந்த சிரமங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு பயணிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்.
கிழித்துவிடும் அபாயம்
நான் தினமும் அரசு பஸ்சில் சென்று வருகிறேன். ஜன்னல் ஓர கம்பிகள் சில நேரங்களில் கைகளை கிழித்து விடும் அபாயம் இருக்கிறது. பஸ்சை சுகாதாரமாக வைத்தால் மேலும் பல பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டுவர்.
- ரேணுகா
மழைக்காலத்தில் ஒழுகுது
கூட்ட நெரிசலில் பயணிக்க சிரமமாக உள்ளது. பெண்கள் என்பதால் இன்னும் பல கூடுதல் சிக்கல்களை கடந்து செல்லும் நிலையுள்ளது. மழைநீர் ஒழுகுகிறது. பிரச்னைகளுக்கு இந்தாண்டாவது தீர்வு கிடைக்க வேண்டும்.
-உஷா
'அநாதை' பஸ்கள்
பயணிகள் எங்களிடம் பல முறை குறைகளை கூறுவதுண்டு. பஸ்சிற்கு தேவையான பொருட்கள் பற்றாக்குறையாகவும், தரமற்று இருப்பதாலும் பல இடையூறுகளை சந்திக்கும் நிலையுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பல பஸ்கள் அநாதையாக விடப்பட்டு நாளடைவில் மழை வெயில் காலங்களில் துருப்பிடிக்கிறது. சில இளைஞர்கள் பஸ் கண்ணாடியை உடைப்பது, சீட்டை கீழிப்பது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதால் அடிக்கடி பஸ்சிற்கு தேவையான பொருட்களை மாற்றும் நிலை வருகிறது.
- வேல்முருகன்கண்டக்டர்

