ADDED : மார் 15, 2025 05:34 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா பகுதிகளில் புள்ளி மான்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாய்கள் கடித்தும், சாலை விபத்துகளிலும் அவை தொடர்ந்து பலியாவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலையில் இருந்து மான்கள் இரை, தண்ணீரை தேடி மலையை விட்டு கீழே இறங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் துார்ந்து போய், சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருப்பதால் அங்கு தஞ்சம் அடைகின்றன.
இரை மற்றும் தண்ணீருக்காக சில நேரங்களில் ரோட்டை கடந்து செல்கின்றன. அவ்வாறான நேரங்களில் பல மான்கள் நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிபட்டும் பலியாகின்றன.
பலியாகும் மான்களின் எண்ணிக்கை சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதுபற்றி வனத்துறையினர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மான்களை பாதுகாப்பதில் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனை தடுக்க ஆண்டுதோறும் காட்டுப்பன்றி, மான்கள் உட்பட வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவற்றை வனத்துக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.