/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுாரில் சிப்காட் அமைக்க டி.பி.ஆர்., அறிக்கை விரைவில் டெண்டர் விட ஏற்பாடு
/
மேலுாரில் சிப்காட் அமைக்க டி.பி.ஆர்., அறிக்கை விரைவில் டெண்டர் விட ஏற்பாடு
மேலுாரில் சிப்காட் அமைக்க டி.பி.ஆர்., அறிக்கை விரைவில் டெண்டர் விட ஏற்பாடு
மேலுாரில் சிப்காட் அமைக்க டி.பி.ஆர்., அறிக்கை விரைவில் டெண்டர் விட ஏற்பாடு
ADDED : ஆக 02, 2024 05:08 AM
மதுரை: ''மதுரை மேலுாரில் 'சிப்காட்' அமைப்பதற்கு 2 வாரங்களுக்குள் டி.பி.ஆர்., அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் விடப்படும்'' என மதுரையில் சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
மதுரையில் சிப்காட் தொழில் புத்தாக்க மையம் அமைப்பதற்கான தொழில் முனைவோர் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ஏற்பாடுகளை செய்தன.
இதில் சிப்காட் நிர்வாக இயக்குநர் செந்தில்ராஜ் பேசியதாவது:
காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரியில் ஓசூரை அடுத்து மதுரையில் சிப்காட் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்பட உள்ளது.
அதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தோம்.
மாநகராட்சி பகுதி உட்பட 4 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 26 ஆயிரத்து 500 சதுரஅடி பரப்பளவில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் மையம் அமைக்கப்படும். 'டேனி' புதுமை நிதியின் கீழ் ரூ.10 கோடியும், மீதி சிப்காட் மூலமும் செயல்படுத்தப்படும்.
தொழில்முனைவோர், புதுமை தொழில்செய்வோருக்கு தேவையான இயந்திரங்கள், கருவிகள் இம்மையத்தில் இருக்கும். தொழில் நிறுவன பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடம் உள்ள பிரச்னைகளை கேட்டறிந்து 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மூலம் தீர்வு காண உள்ளோம். மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தொழில் முனைவோராக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இடம் தேர்வான பின் டெண்டருக்கு ஏற்பாடு செய்து உபகரணங்கள் வாங்கப்படும். ஆறுமாத காலத்திற்குள் இம்மையம் செயல்பாட்டுக்கு வரும்.
முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட்டில் அறிவித்தபடி மதுரை மேலுாரில் அரசு நிலத்தில் 278 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்படும். சாலைவசதி, கழிவுநீர், மின்வசதி, குடிநீர் வசதி, டிரக் செல்லும் வசதி குறித்து பொறியாளர்கள் அளவெடுத்துள்ளனர். 2 வாரங்களுக்குள் 'விரிவான திட்ட அறிக்கை'க்கான (டி.பி.ஆர்.) டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும். அதன்பிறகு தேவைக்கேற்ற அளவில் மனைகளாக பிரித்து போர்ட்டலில் பதிவு செய்வோம். தகுதியான நபருக்கு வெளிப்படைத்தன்மையுடன் இடம் வழங்கப்படும்.
மதுரை - துாத்துக்குடி காரிடாரில் சிப்காட், சிட்கோ, எல்காட் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றார்.
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் சி.இ.ஓ., சிவராஜ், போர்ஜ் சி.இ.ஓ. விஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.