/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இ - காமர்ஸ் தளங்களால் சிறுவணிகர்கள் பாதிப்பு'
/
'இ - காமர்ஸ் தளங்களால் சிறுவணிகர்கள் பாதிப்பு'
ADDED : செப் 17, 2024 05:32 AM
மதுரை,: ஆன்லைன் வணிக நிறுவனங்கள் (இ- - காமர்ஸ்) மிகக்குறைந்த விலைக்கு கூட ஆர்டர்கள் பெறுவதால் சிறுவணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறைந்தபட்ச ஆன்லைன் ஆர்டர் வரம்பை ரூ.10 ஆயிரமாக மத்திய வணிகத்துறை அமைச்சகம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்தியாவில் 10 கோடி பேர் சிறு, குறு வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களின் மூலம் 40 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் குண்டூசி முதல் கம்ப்யூட்டர், லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள் வரை வாங்க முடிகிறது.
ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும் பெருநிறுவனங்கள் ஒரு பொருளை ரூ.100க்கு வாங்கி அதை ரூ.80க்கு விற்று சந்தையை கைவசப்படுத்துவதால் குறு,
சிறு வணிகத்தில் ஈடுபடுவோர் நஷ்டத்தை சந்திக்கிறோம் என்கிறார் தமிழ்நாடு ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர் அஸ்ரப் தயூப்.
மதுரையில் அவர் கூறியதாவது:
ஜவுளித்தொழில்கள் மட்டும் ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படவில்லை. அனைத்து வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தளங்கள் மொத்தம் ரூ.6000 கோடி அளவுக்கு விலையை குறைத்து உள்ளூர் சந்தைகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதை மத்திய வணிகத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இ -- காமர்ஸ் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கான வரம்பை மத்திய வணிகத்துறை அமைச்சகம் நிர்ணயிக்க வேண்டும்.
ரூ.50 கோடிக்கு மேல் விற்றுமுதல் (டர்ன்ஓவர்) செய்யும் இ - காமர்ஸ் நிறுவன தளங்களை நடுத்தர நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்.
இவற்றில் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான ஆர்டர் அதிகபட்ச தொகையாக ரூ.10ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும். ரூ.10ஆயிரத்திற்கு மேல் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யக்கூடாது என்ற கொள்கையை மத்திய வணிகத்துறை அமைச்சகம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள வணிகர்களும் அவர்களின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவோரும் பாதுகாக்கப்படுவர்.
இதை வலியுறுத்தி மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.