ADDED : ஆக 10, 2026 06:23 PM
வாடிப்பட்டி: சமயநல்லுாரில் நெடுஞ்சாலைதுறைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மண் மட்டும் அகற்றப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: விபத்தை தடுக்க சாலையின் நடுவே மின் விளக்குகள் அமைக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை மழை நீர் வடிகால் நடைபாதை மீது தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தன. 3 நாட்களாக ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அவற்றை அகற்ற அறிவிப்பு செய்தனர். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வழக்கம் போல் கடை, ஓட்டல் என ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருந்தனர். நேற்று நெடுஞ்சாலை துறையினர் இயந்திரம், டிராக்டர் உடன் வந்ததும் அடுப்பு உள்ளிட்டவற்றை உள்ளே இழுத்து வைத்து, கூடுதல் நேரம் கேட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சாலை ஓரங்களில் இருந்த மண்ணை அகற்றினர். ஒரு நாள் கூத்தாக ஆக்கிரமிப்பை அகற்றாமல், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து, பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்களை கண்காணித்து அபராதம், பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.
