/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஞ்சமில்லாம கிடைக்குது: விலையில் சரிந்து வரும் அரிசி: இன்னும் குறைய வாய்ப்பிருக்கு
/
பஞ்சமில்லாம கிடைக்குது: விலையில் சரிந்து வரும் அரிசி: இன்னும் குறைய வாய்ப்பிருக்கு
பஞ்சமில்லாம கிடைக்குது: விலையில் சரிந்து வரும் அரிசி: இன்னும் குறைய வாய்ப்பிருக்கு
பஞ்சமில்லாம கிடைக்குது: விலையில் சரிந்து வரும் அரிசி: இன்னும் குறைய வாய்ப்பிருக்கு
ADDED : ஆக 24, 2024 03:59 AM

மதுரை: மதுரையில் மூன்று மாதங்களாக அரிசி விலையில் கிலோவுக்கு ரூ.10 வரை விலை சரிந்துள்ளது.
மதுரைக்கு பிற மாவட்டங்கள் தவிர, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அரிசி வரத்துள்ளது. தமிழகத்தில் அரிசி விலையை நிர்ணயம் செய்யும் அளவுக்கு அம்மாநிலங்களின் ஆதிக்கம் உள்ளது. மூன்று மாதங்களாக அரிசி விலை குறைந்து வருகிறது. பெரும்பாலும் பெருவட்டு ரக அரிசியை உற்பத்தி செய்யும் தமிழகத்தில் சன்னரக அரிசியை உற்பத்தி செய்தால் விலை குறைய வாய்ப்புள்ளது என்கின்றனர் அரிசி ஆலை உரிமையாளர்கள்.
மதுரை சங்க செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: அரிசி விலை குறைந்தே வந்துள்ளது. கடந்த ஜூனில் கிலோவுக்கு ரூ.58 முதல் ரூ.60 வரை விற்ற அரிசி, தற்போது ரூ.10 வரை குறைந்து விற்கிறது. பருவமழை எதிர்பார்த்தது போல இருந்ததால் மேற்கண்ட மாநிலங்களில் இருந்து அதிகளவு அரிசி வரத்து இருந்தது. விரைவில் தமிழகத்திலும் 2ம் போக நிலங்களில் முதல் போக அறுவடை நடக்க உள்ளது. இதனால் மேலும் விலை குறையும்.தற்போதைய நிலையில் ஆர்.என்.ஆர்., ரகம் கிலோவுக்கு ரூ.50 (பழைய விலை ரூ.58 - 60), பி.பி.டி., எனும் பொன்னி ரகங்கள் விலை தற்போது ரூ.48 க்கு (ரூ.50 - 55) விற்கிறது. மதுரைக்கு 80 சதவீதம் வெளி மாநிலங்களில் இருந்தே அரிசி வருகிறது. தமிழக மக்கள் பெரும்பாலும் சன்னரக அரிசியையே விரும்புகின்றனர். ஆனால் இங்கு பெருவட்டு ரகம் பயிராகிறது. இதுபோன்ற காரணங்களால் அரிசி ஆலை தொழிலும் நலிவுற்ற நிலையில்தான் உள்ளது. எந்த ஆலையும் சரிவர இயங்கவில்லை. தொடர் நெருக்கடியாக மின்கட்டணம் உயர்வு, அரிசி உட்பட உணவுப் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு போன்றவையும் காரணமாக உள்ளது.
இதை தவிர்க்க உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது அவசியம். மின்சார பயன்பாட்டிலும் மானியம் வழங்க வேண்டும். 2011ல் கடும் மின்தட்டுப்பாடு இருந்தபோதுகூட விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
அதுபோல தடையற்ற மின்சாரம் அவசியம். நவீன கிட்டங்கிகள், இயந்திரங்கள், உபகரணங்கள், கட்டுமானங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதிகளான ஆறுகளை இணைப்பது மூலம் சாகுபடி பரப்பை அதிகரிக்கலாம்.
சன்னரக அரிசி உற்பத்திக்கு வேளாண் ஆராய்ச்சித் துறைகளுடன் இணைந்து ஊக்குவிக்கலாம். இவ்வாறு கூறினார்.

