/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் பேரையூரில் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம்
/
மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் பேரையூரில் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம்
மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் பேரையூரில் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம்
மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் பேரையூரில் ஆடிப்பட்டத்தில் விதைக்க ஆர்வம்
ADDED : ஆக 08, 2024 05:08 AM

பேரையர்: ஆடிப்பட்ட சாகுபடிக்கு மானாவாரி நிலத்தில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள பேரையூர் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து தயாராக உள்ளனர்.
பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பருவமழையை மட்டுமே நம்பி உள்ள இந்நிலங்களில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்படும்.
தண்ணீர் செழிப்பாக உள்ள இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களாக வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலால் விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களில் சாகுபடியை தவிர்த்து உழவு செய்தும், இயற்கை உரங்களை இட்டும் நிலங்களை பண்படுத்தி வந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் சிலர் விதைப்புக்காக மழையை எதிர்நோக்கி உள்ளனர். விதைப்புக்காக விதைகள் மற்றும் உரங்களை வாங்கி வைத்துள்ளனர். இப்பகுதியில் மக்காச்சோளம் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படும். இதற்காக வேளாண் துறை சார்பில் மானியத்தில் விதைகள் வழங்கப்படுவதில்லை. எனவே விவசாயிகள் கூடுதல் விலை கொடுத்து தனியார் கடைகளில் விதைகளை வாங்கி வைத்துள்ளனர்.
விவசாயி முருகேசன் கூறியதாவது: எனது 2 ஏக்கர் நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டு, உழவு செய்து விதைப்புக்கு நிலத்தை தயார் படுத்தி, மழையை எதிர்நோக்கி இருக்கிறேன். மழை பெய்தால் மக்காச்சோளம் விதைக்க தயாராக உள்ளேன் என்றார்.
ஜெயபிரகாஷ் கூறுகையில், ''எனது 3 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட உள்ளேன். இதற்காக விதைகளை கிலோ ரூ.400 க்கு வாங்கி வைத்துள்ளேன். மானியத்தில் மக்காச்சோள விதைகளை அரசு வழங்குவதில்லை. கூடுதல் விலை கொடுத்துதான் வாங்கி வைத்துள்ளோம் என்றார்.