ADDED : மே 01, 2024 07:40 AM

மதுரை ரயில்வே ஸ்டேஷனிற்கு கூடல்புதுார், திருமங்கலம், ராமேஸ்வரம் பாதை வழியாக ரயில்கள் வருகின்றன. ரயில்கள் அடுத்தடுத்து வரும்போது விபத்தை தவிர்க்க 'ரெட்' சிக்னல் கொடுக்கப்பட்டு ஸ்டேஷனிற்கு வெளியே சில நிமிடங்கள் நிறுத்தப்படுகின்றன. இதில் கூடல்புதுார் பகுதியிலிருந்து வரும் ரயில்கள் தத்தனேரி பகுதிகளில் நிறுத்தப்படும்போது செல்லுார் கண்மாய் பகுதியில் இருந்து ரயிலில் ஏறும் திருடர்கள் பயணிகளை தாக்கி அலைபேசி, பணம், நகையை பறித்துச்செல்கின்றனர்.
ஜாமினில் வந்து 'அட்டாக்'
நேற்று முன்தினம் (ஏப்., 29) தத்தனேரி பகுதியில் சிக்னலுக்காக நின்ற போது ரயில்வே பெண் கார்டு ராக்கியை தாக்கி நகை பணத்தை பறிக்க முயன்று அவரை தாக்கியதில் காயமுற்றார். இதுதொடர்பாக செல்லுாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனை ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டா கைது செய்தார். மற்றொரு 16 வயது சிறுவனை தேடுகின்றனர்.
போலீசார் கூறியதாவது: இச்சிறுவர்கள் மீது செல்லுார், கரிமேடு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழிப்பறி, திருட்டு வழக்குகளில்அடிக்கடி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றுள்ளனர். 17 வயது சிறுவனுக்கு 17 வழக்குகளும், 16 வயது சிறுவனுக்கு 7 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கைதான சிறுவன் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 நாளுக்கு முன்பு தான் ஜாமினில் வந்துள்ளான் என்றனர்.
தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவத்தால் பயணிகளுக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண திண்டுக்கல் பகுதியில் இருந்து வரும் ரயில்களை கூடல்புதுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி சிக்னல் கிடைத்தவுடன் மதுரை ஸ்டேஷனிற்குள் அனுமதிக்க வேண்டும்.