எப்.கியூ.எல்., மோசடி: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
எப்.கியூ.எல்., மோசடி: சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
ADDED : செப் 25, 2026 05:13 AM
மதுரை: எப்.கியூ.எல்., செயலி மூலம் நிதி மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலுார் அருகே கல்லம்பட்டி சாந்தகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
என்னிடம் சிலர் எப்.கியூ.எல்., அலைபேசி செயலி மூலம் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 45 நாட்களில் இரட்டிப்பாக பணம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினர். நானும், மனைவியும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செலுத்தினோம்.
பின் அந்த செயலி செயல்பாட்டில் இல்லை. என்னைப் போல் பலரிடம் இதுபோல் பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது. மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுபோல் திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.1000 கோடி மோசடி நடந்துள்ளது.
இதில் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளது. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவு: குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை கோர வேண்டியுள்ளது. அவர்களையும் இவ்வழக்கில் எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும்.
விசாரணை அக்., 8 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
