/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி தேரோட்டம்
/
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி தேரோட்டம்
ADDED : நவ 09, 2024 05:04 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று நடந்தது.
காலை 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளினார். நவ. 3 முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர்.
பாவாடை நைவேதனம்
மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியினால் தயாரான தயிர் சாதம் படைத்தனர். அதன்மீது காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை தரிசனம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிர மணிய சுவாமி, தெய்வானை அருள் பாலித்தனர்.
தேர் தாமதம்
தேரோட்டத்திற்கு முன்பாகவே ரத வீதிகளின் குறுக்கே இருந்த மின் ஒயர்களை பணியாளர்கள் தேர் செல்ல வசதியாக துண்டித்தனர். ஆனால் கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்படவில்லை. இதனால் கேபிள் ஒயர் இருந்த பகுதியில் தேரை 10 நிமிடங்கள் நிறுத்தி, ஒயர்களை துண்டித்த பின்பு சென்றனர். இதனால் தேர் வலம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்ய பிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.