/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வூதியர்களுக்கு இடையூறான 'கிரானைட்' கற்கள்
/
ஓய்வூதியர்களுக்கு இடையூறான 'கிரானைட்' கற்கள்
ADDED : ஆக 08, 2024 05:04 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிடக்கும் கிரானைட் கற்களால் நடமாடுவது சிரமமாக உள்ளது என ஓய்வூதியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நுழைவு வாயிலின் கிழக்கு பகுதியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், அவர்களுக்கான கூட்ட அரங்கு ஆகிய 3 கட்டடங்கள் அருகருகே அமைந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு நடந்தபோது பிடிபட்ட பல டன் எடையுள்ள பெரிய பெரிய கிரானைட் கற்கள் பல இக்கட்டடங்களின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வழக்குகள் தொடர்பான கற்கள் என்பதால் நீண்ட காலமாக அதை அப்புறப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் இந்த அலுவலகங்கள் அருகே நடமாட அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சிரமப்படுகின்றனர். கிரானைட் கற்களிடையே புதர்கள் வளர்ந்து மண்டிக் கிடப்பதால் விஷஜந்துகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் கட்டடத்தையும், கற்களுக்கும் இடையே சிறியபாதை வழியாக கழிப்பறைக்குக் கூட செல்ல இயலாமல் தவிக்கின்றனர்.
கற்களை அகற்றினால் இப்பகுதியில் தாராளமாக நடமாட முடியும். வாகனங்களையும் நிறுத்த முடியும். கற்களை 10 மீட்டர் தள்ளி காம்பவுண்ட் சுவர் அருகே வைத்தால் எந்த இடையூறும் இருக்காது. இதுகுறித்து கலெக்டர் முதல் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஓய்வூதியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை இல்லாததால் வேதனை தெரிவிக்கின்றனர்.