/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.எஸ்.ஐ., பெயரிலுள்ள பட்டாவை அரசு பெயரில் மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
சி.எஸ்.ஐ., பெயரிலுள்ள பட்டாவை அரசு பெயரில் மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சி.எஸ்.ஐ., பெயரிலுள்ள பட்டாவை அரசு பெயரில் மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சி.எஸ்.ஐ., பெயரிலுள்ள பட்டாவை அரசு பெயரில் மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : செப் 03, 2024 06:16 AM
மதுரை : மதுரையில் அரசின் ஒப்படைவு நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில் சி.எஸ்.ஐ.டி.ஏ., பெயரிலுள்ள பட்டாவை அரசின் பெயரில் மாற்ற நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தேவசகாயம் தாக்கல் செய்த மனு:
மதுரை தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலம் 1912ல் அமெரிக்க மிஷனரியின் 'அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ் (ஏ.பி.சி.எப்.எம்.,) வசம் கலெக்டரால் ஒப்படைவு செய்யப்பட்டது. இதற்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தை மதிப்பு தொகையை செலுத்த வேண்டும். நிலத்தை தொழில், தொண்டு நோக்கங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மீறினால் நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்.
ஏ.பி.சி.எப்.எம்., பெயரானது 'யுனைடெட் சர்ச் போர்டு' என மாற்றம் செய்யப்பட்டது. நிலத்தில் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஆதரவற்றோருக்கான தொழில் பயிற்சி நிலையத்திற்கு பயன்படுத்தியது. 'யுனைடெட் சர்ச் போர்டின் சில சொத்துக்கள் 'சர்ச் ஆப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேஷ'னுக்கு (சி.எஸ்.ஐ.டி.ஏ.,) சட்டவிரோதமாக மாற்றப்பட்டன.
சி.எஸ்.ஐ.டி.ஏ.,வின் இயக்குனர்கள், சி.எஸ்.ஐ., மதுரை- ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் சிலருடன் கூட்டுச் சேர்ந்து அரசுக்கு சொந்தமான ஒப்படைவு நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
அந்த 31.10 ஏக்கர் நிலத்தை மீட்க வருவாய்த்துறை செயலர், நில நிர்வாக கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2022 டிச.13 ல் நீதிபதிகள் அமர்வு,' தமிழக அரசு தரப்பில் மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
நிலத்தை மீட்க நில நிர்வாக கமிஷனர் 2024 ஜன.11 ல் உத்தரவிட்டார். ஒட்டுமொத்த சொத்திற்கான பட்டா சி.எஸ்.ஐ.டி.ஏ., பெயரில் உள்ளது. சொத்தினை பல வழிகளில் அபகரிக்க வாய்ப்புள்ளது. பட்டாவை அரசின் பெயரில் மாற்றக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.டி.ஆஷா நில நிர்வாக கமிஷனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப். 10 க்கு ஒத்திவைத்தார்.