/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின் கம்பங்களால் நீர்நிலை சேதம்; புனரமைக்க இழப்பீடு வசூலிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மின் கம்பங்களால் நீர்நிலை சேதம்; புனரமைக்க இழப்பீடு வசூலிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மின் கம்பங்களால் நீர்நிலை சேதம்; புனரமைக்க இழப்பீடு வசூலிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மின் கம்பங்களால் நீர்நிலை சேதம்; புனரமைக்க இழப்பீடு வசூலிக்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 01, 2025 04:13 AM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடை புறம்போக்கில் மின்கம்பம் அமைத்ததற்கு தலா ரூ.25 ஆயிரம் வசூலித்து நீர்நிலையை புனரமைக்க பயன்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே திருமலை கவுண்டன் வலசையை சேர்ந்த ஜெயகுமார் தாக்கல் செய்த மனு:காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல ஒண்டிவீரன் ஓடை புறம்போக்கு நிலத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர், ஒட்டன்சத்திரம் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு:
கலெக்டர் விசாரணை நடத்தினார். மின்கம்பங்கள் அமைத்ததால் வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று மின்கம்பங்கள் அமைக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் அனுப்பிய ஆட்சேபனை மனு மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவரது அறிக்கைக்கு எதிராக மனுதாரர் இவ்வழக்கை தாக்கல் செய்தார். நீர்நிலை அல்லது நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு 2024 செப்.,13ல் அரசாணையாக வெளியிட்டுள்ளது.
இவ்வழக்கில் மின்கம்பங்கள் 2014-15 ல் நிறுவப்பட்டன. 2024 அரசாணையை பின்னோக்கி பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது.
உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று மின்கம்பங்களை நிறுவியிருக்க முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மின்கம்பம் நட்டதால் ஏற்பட்ட பாதிப்பிற்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வசூலித்து, வளர்ச்சிப் பணியை முறைப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். வசூலிக்கப்படும் தொகையை மின்கம்பங்கள் நடப்பட்டதால் சேதமடைந்த நீர்நிலைகளை புனரமைக்க பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தோம்.
அதே அணுகுமுறையை இவ்வழக்கிலும் பின்பற்றுகிறோம். மின்கம்பங்கள் அமைத்ததால் பயனடைந்தவர் யார் என்று தெரியவில்லை. ஒரு மின்கம்பத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் செலுத்துமாறு தற்போதைய பயனாளிக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பயனாளி தொகையை செலுத்த மறுத்தால், எவ்வித அறிவிப்பும் இன்றி மின்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.