sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை

/

அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை

அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை

அரசியல்வாதிகள் பள்ளிகளில் ஹிந்தி உண்டு; அரசு பள்ளிகளில் இல்லை

1


ADDED : பிப் 22, 2025 05:50 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏழை மாணவர்களுக்கு கிடைத்த வரம் இது


தீனதயாளன், பேராசிரியர், மதுரை

தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும். 1986க்கு பின் 2020 ல் தான் கல்வி கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டு முதல் ஐந்து வகுப்புகள் தாய்மொழி பயிற்று மொழியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கட்டாயம் மொழிப்பாடம் ஆகும். மூன்றாவது மொழி ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை மாணவர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பயன்பெறுவர் கிராமப்புற மாணவர்களின் மொழி ஆளுமை பேசுவதிலும், எழுதுவதிலும் சிந்திப்பதிலும் அதிகரிக்கும் அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு பணிகளில் சேரும் பணியாளர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் சிரமம் இருக்காது. அதிக மொழிகள் கற்பதால் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மொழிகள் அதிகம் தெரிந்து வைத்திருப்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏழை மாணவர்களுக்கும் வசதி படைத்த மாணவர்களுக்கும் உள்ள மொழி அறிவு இடைவெளி பெரிதும் குறையும்.

கட்டணம் இல்லாமல் மூன்றாவது மொழி பயில்வது மாணவர்களுக்கு கிடைத்த வரம் என்றே கூறலாம்.

சுயநலத்துடன் வேண்டாம்


கல்வாரி தியாகராஜன், மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகளின் கூட்டமைப்பு

இன்றைய நவீன கால கல்வி கட்டமைப்பில் பல மொழிகள் கற்றுக்கொள்வது என்பது மிக அடிப்படை அவசியமாகிறது. மாணவர்களுக்கு இரு மொழி கொள்கை என்பது சுத்த அபத்தமாகி அது இன்றைய சூழ்நிலைக்கு மலையேறிப் போய் விட்டது என்று தான் குறிப்பிட வேண்டும். இதை ஹிந்தி மொழி திணிப்பு என தமிழக அரசியல்வாதிகள் மடைமாற்றி மக்களை குழப்பமடைய செய்கின்றனர். இதை தற்போது மக்களும் புரிந்துகொள்கிறார்கள் என்பதை தமிழகம் கவனிக்க வேண்டும். தற்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி கொள்கையை செயல்படுத்தி அதிக ஆண்டுகள் ஆகின்றன. இன்று சி.பி.எஸ்.இ., பள்ளியிலிருந்து மெட்ரிக் பள்ளி, இளம் மழலையர் பள்ளி என்று அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் ஹிந்தி மற்ற மொழிகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் பல மொழிகளை கற்றுக்கொள்வதால் அவர்களது தன்னம்பிக்கை, அறிவுத்திறன் கூடுகிறது. அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது அவர்கள் கற்றுக்கொண்ட பல மொழிகள் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது. பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பல மொழிகள் கற்றுக் கொள்வதையே விரும்புகின்றனர். மத்திய அரசு கொண்டுவரும் தேசிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளிகளை மாநில அரசுகள் தங்களுடைய சுயநலம் கருதாமல் மாணவர்கள் எதிர்காலம் கருதி மொழி அரசியலை கடந்து தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு கொடுக்கும் நிதியையும் முழுமையாக பெற்றுக்கொண்டு இந்த நவீன கால மாணவத் தலைமுறைக்கு ஏற்ற அரசாக மாற வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பம்.

வாய்ப்புகள் வழங்க வேண்டும்


ராமகிருஷ்ணன், பொறியாளர், மதுரை

தேசிய கல்விக் கொள்கையின்படி ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகள் பேசக் கூடியவர்கள அதிகம் உள்ளோம். அவர்கள் எல்லோருக்கும் தாய்மொழி வேறு வேறு. அவர்கள் படிப்பதற்கான வாய்பு இல்லை.

பிப்.,21 ஐ உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. உலக அளவில் 40 சதவீதம் மக்களுக்கு அவர்கள் தாய்மொழியில் கற்பதற்கு வாய்ப்பில்லை எனவும் யுனஸ்கோ தெரிவித்துள்ளது. உதாரணமாக மதுரையை எடுத்துக்கொண்டால், இது ஒரு குட்டி இந்தியா. இங்கு பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து தொழிலாளர்கள் வந்துள்ளனர். ஹிந்தி பேசக் கூடியவர்கள் உள்ளனர். ராஜஸ்தான் மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த மாநிலங்களில் ஆங்கிலத்தில் படித்திருக்க முடியாது. ஆனால் தாய்மொழி தெரியும். மும்மொழி கொள்கை வந்தால் அவர்கள் மதுரையிலும் தங்கள் தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெங்களூருவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கும் தமிழ் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

தாய்மொழியே பிரதானம்


எஸ்.பாஸ்கரன்

ஓய்வு தலைமை ஆசிரியர், டி.கல்லுப்பட்டி

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள தேர்வு முறை மாணவர் நலனுக்கானதே. தமிழகத்தின் மூன்றில் ஒரு பள்ளியில் உருது, தெலுங்கு, கன்னடம் என பிறமொழிகள் கற்பிக்கப்படும்போது, ஏதோ ஒரு மொழி அல்லது ஹிந்தி என கற்பிப்பதால் மாணவருக்கு நல்லதுதானே. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிதான் முதலில் கற்பிக்கப்பட வேண்டும் எனக்கூறுகிறது. தமிழக கல்விக்கொள்கையில்கூட இது இல்லை. தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஏதோ ஒரு பிறமொழியை படிக்கலாம் என்றுதான் கூறுகிறது. இதில் தவறில்லைதானே.

மூன்றில் ஒரு அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற கல்வி விஷயங்களில் மொழியை அரசியலாக பார்க்கக் கூடாது. மாணவர்கள் நலனே இதில் முக்கியமாகக் கொள்ள வேண்டும். ஹிந்திதான் தேவை என்றில்லை. ஆனால் மூன்றாவது ஒரு மொழி தேவை என்பது அவசியமே.

அரசியல்வாதிகள் இரட்டை வேடம்


ஜி.ஆறுமுகப்பெருமாள்

ஓய்வு முதுகலை ஆசிரியர், மதுரை

இந்திய தேசியம் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தேசிய கல்விக் கொள்கையும். மா, பலா, வாழை முக்கனி என்பது போல, தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் போல மற்றொரு மொழியை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தாய்மொழியால் மாநில அளவிலும், ஆங்கிலத்தால் உலகளவிலும், மற்றொரு இந்திய மொழியால் பிற மாநிலங்களிலும் சென்று பணியாற்றவும், தொடர்பு கொள்ளவும் உதவும் மொழியை படிப்பதில் என்ன தவறு உள்ளது.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற அவ்வையாரின் கூற்றுக்கு வலுசேர்ப்பதாக இது உள்ளது. கூடுதலாக ஒரு மொழி படிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுவோரின் குடும்பத்தில் மற்றொரு மொழி குறிப்பாக ஹிந்தியை படிக்கின்றனர். அந்த அரசியல்வாதிகள் எந்த மொழியை வெறுக்கிறார்களோ, அதனை தங்கள் கல்வி நிறுவனங்களில் பாடமொழியாக வைத்துள்ளனர். இது இரட்டை வேடம். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும், மூன்றாவது ஒரு மொழியை படிப்பதும் மக்கள் நலனுக்கானது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

மொழி தான் மனிதர்களை இணைக்கும்


கண்மணி, தனியார் பள்ளி தாளாளர்

ஒரு மொழி கற்பது ஒரு மனிதனுக்கு சமம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கற்றுக் கொண்டால் மூன்று மனிதர்களுக்குரிய கூடுதல் பலம் கிடைக்கும். வட இந்தியா செல்லும் போது அவர்களின் தாய்மொழியான ஹிந்தியில் பேசும் போது எளிதாக பழக முடிகிறது. மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் ஹிந்தியில் பேசி தங்களது பொருட்களை எளிதாக விற்பனை செய்ய முடியும். தமிழக எல்லையைத் தாண்டினாலே ஹிந்தி பேசத் தெரிந்திருந்தால் எளிதாக வாழ முடியும். இந்தியாவின் எந்த கல்லுாரிக்கு படிக்க சென்றாலும் ஹிந்தி தெரிந்திருந்தால் எளிதில் நட்பாகி விடலாம். சமஸ்கிருதம், பிரெஞ்ச் படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எங்களிடம் பயின்ற மாணவர்கள் நிறைய பேர் பிரெஞ்ச் மொழி கற்றுக் கொண்டு 'ஆன்லைன் டியூட்டராக' மாதம் ரூ.40ஆயிரம் வரை வீட்டிலிருந்தே சம்பாதிக்கின்றனர். ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரிந்தால் பிரான்ஸ் நாட்டில் வேலை எளிதாக கிடைக்கிறது. தமிழ் தாய்மொழி, ஆங்கிலம் பொதுமொழி. மற்ற மொழிகள் பிற மாநிலத்தவரை இணைக்கும் மொழி.

கூடுதல் மொழிகள் கற்றுக் கொண்டால் பயமில்லாமல் தன்னம்பிக்கையுடன் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியும். பிறமொழிகளும் வேலை வாய்ப்பு தருகிறது.






      Dinamalar
      Follow us