ADDED : மார் 31, 2024 03:41 AM
மதுரை, : நான் என்கிற அகந்தை துளியும் கூடாது என எழுத்தாளர் இந்திரா செளந்தரராஜன் பேசினார்.
மதுரை காஞ்சி ஸ்ரீகாமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான மாதாந்திர அனுஷ வைபவம் நடைபெற்றது.
அதில் குருமகிமை எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசியது:
பாவ புண்ணியங்களின்றி வாழவே முடியாது. இதிலிருந்து விடுபட ஒரே வழி அனைத்தையும் கிருஷ்ணார்ப்பணம் என்று அந்த கிருஷ்ணனுக்கேஅர்ப்பணித்து விட வேண்டும். பற்றில்லாத பற்றுடன் நாம் காரியங்களை செய்ய வேண்டும். நான் என்கிற அகந்தை துளியும் கூடாது.
அதனாலேயே சன்னியாசிகள் தங்களை ஒரு போதும் தன்னிலைப்படுத்தி பேச மாட்டார்கள்.
வைணவ குருவான ராமானுஜர் மந்திரோபதேசம் பெறுவதற்காக திருக்கோட்டியூர் ஆச்சார்ய நம்பியிடம் வந்தார். அவர் வந்திருப்பது என்று கேட்பார். ராமானுஜர் நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்பார். அவர் அவ்வாறு சொன்ன வரை அவருக்கு ஆச்சார்ய நம்பி மந்திரோபதேசம் செய்யவில்லை. தன் தவறை உணர்ந்து அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று சொன்ன பின்னரே ஆச்சார்ய நம்பி மந்திரோபதேசம் செய்தார்.
நம் குருநாதர்கள் தங்களை தாழ்த்தியே காட்டிக்கொள்வர். பணிவில் தாழ்பவனையே உலகம் போற்றும்.
இவ்வாறு இந்திரா சௌந்தரராஜன் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர். டி. ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீ குமார், ஸ்ரீதர்,ராமகிருஷ்ணன், ஸ்ரீ ராமன், சங்கர் ராமன், ஆர்.பரத்வாஜ் செய்திருந்தனர்.

