/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பேச்சில்லா கிராமங்களை' அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்க யோசனை வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
/
'பேச்சில்லா கிராமங்களை' அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்க யோசனை வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
'பேச்சில்லா கிராமங்களை' அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்க யோசனை வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
'பேச்சில்லா கிராமங்களை' அருகிலுள்ள கிராமங்களுடன் இணைக்க யோசனை வி.ஏ.ஓ., பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2024 06:08 AM

மதுரை: தமிழகத்தில் 'பேச்சில்லா கிராமங்களை' அருகில் உள்ள கிராமங்களுடன் இணைத்து, பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக வருவாய்த் துறை நிர்வாகத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன.
இவற்றில் பல 'பேச்சில்லா கிராமங்கள்' என்ற வகையில் உள்ளன. பிரிட்டிஷார் காலத்தில் கண்மாய், நிலங்கள் அடிப்படையில் கிராமங்கள் பிரிக்கப்பட்டன. சில பகுதிகளில் கண்மாய், நிலங்கள் இருக்கும். ஆனால் ஆட்கள் வசிக்கமாட்டார்கள். இதனை ஏட்டளவில் பேச்சில்லா கிராமங்கள்' என்று அழைத்தனர். இங்கு நிலங்கள் இருந்தால் பக்கத்து கிராமத்து ஆட்கள் சென்று கவனிப்பதும் உண்டு.
இக்கிராமங்களுக்கும் வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கும் சம்பளம் உண்டு. ஆனால் பணிகள் அதிகமிருப்பதில்லை. நன்செய் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.5, புன்செய் நிலங்களுக்கு ரூ.2.50 என்ற அளவிலேயே வரி உள்ளது. இதனை வசூலிப்பதைவிட, வி.ஏ.ஓ.,க்களே கையில் இருந்தே செலவிடும் நடைமுறையும் இருப்பதாக கூறுகின்றனர்.
இந்த வகை கிராமங்கள் இன்றளவும் ஒரு தாலுகாவுக்கு 2 அல்லது 3 வீதம், தமிழகத்தில் 500 முதல் ஆயிரம் கிராமங்கள் வரை உள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் தமிழகத்தில் ஏராளமான பெரிய கிராமங்கள் உள்ளன.
மக்கள் தொகை அதிகரித்துவிட்டதால், ஒரு வி.ஏ.ஓ.,வே சமாளிக்க சிரமப்பட வேண்டியுள்ளது.
காலமாற்றத்திற்கேற்ப பேச்சில்லா கிராமங்களை அருகே உள்ள கிராமங்களுடன் இணைத்துவிட்டு, அங்குள்ள வி.ஏ.ஓ.,க்களை தேவையான காலியிடங்களில் நியமிக்கலாம் எனக் கூறுகின்றனர்.
பணியிடம் அதிகரிக்கணும்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜன்சேதுபதி கூறியதாவது:
பேச்சில்லா கிராமங்கள் முன்பு இருந்தன. இப்போது பெரும்பாலானவற்றை அருகில் உள்ள வி.ஏ.ஓ.,க்களே நிர்வகிக்கின்றனர்.
இப்போது வரிவசூலிப்பதில்லை. நிலவரிக்கு அடையாளமாக 'கிஸ்தி'தான் வசூலிக்கப்படுகிறது.
மக்கள் தொகை பெருகிவிட்டதால் பல கிராமங்கள் பெரிதாக உள்ளன. ஆனால் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்த பணியிடங்களே இன்றும் தொடர்கிறது. இதனால் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிப்பளு அதிகரித்துள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்க பெரிய கிராமங்களை பிரிக்கலாம். பேச்சில்லா கிராமங்களை அருகில் உள்ள கிராமத்துடன் இணைக்கலாம் என்றார்.