sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்

/

சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்

சந்தேகமா... டாக்டரை கேளுங்கள்


ADDED : மார் 09, 2025 08:59 AM

Google News

ADDED : மார் 09, 2025 08:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை என்ன

- -செந்தமிழ்ச்செல்வன், மதுரை

'ஆஸ்பிரின் (325 எம்.ஜி.), க்ளோபிடோக்ரல் (300 எம்.ஜி.), அடர்வாஸ்டாட்டின் (40 எம்.ஜி.)' இவை 'லோடிங் டோஸ்' எனப்படும். இந்த 3 மாத்திரைகளை எடுத்தபின் அருகில் உள்ள இதயநோய் டாக்டரிடம் உடனடியாக செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இந்த மருந்தை வைத்துக் கொள்வது நல்லது. மாரடைப்பு என்று நீங்கள் உணர்ந்தவுடன் இம்மாத்திரைகளை சாப்பிட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றால் உயிர் காப்பாற்றப்படும். இதை 'கோல்டன் அவர்' என்கிறோம்.

இதயத்தின் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தநாளங்களில் எங்கு எத்தனை சதவீதம் அடைப்பு உள்ளதென 'கொரனரி ஆஞ்சியோகிராம்' பரிசோதனை மூலம் கண்டறியலாம். இது சிகிச்சை அல்ல. பரிசோதனைக்கு பின் சிறிய அளவில் அடைப்புகள் இருந்தால் மருந்து, மாத்திரைகள் மூலம் சரிசெய்யலாம். இதயத்தில் 'ஸ்டென்ட்' வைக்கும் 'ஆஞ்சியோபிளாஸ்டி' மூலம் சரிசெய்யலாம். பைபாஸ் சிகிச்சை என்பது நம் உடலில் உள்ள ரத்தநாளங்களை எடுத்து இதய அடைப்பு இருக்கும் ரத்தநாளங்களைத் தாண்டி மாற்றுப்பாதை வழியாக சென்று பொருத்துவது.

ஒரு அடைப்பு இருந்தால் 'ஸ்டென்ட்' பொருத்துதல், மூன்று அடைப்பு இருந்தால் பைபாஸ் சர்ஜரி என்பது தவறானது. அடைப்பின் எண்ணிக்கையை பொறுத்து அடைப்பு இருக்கும் சதவீதத்தை பொறுத்து நோயாளியின் வயதை பொறுத்து டாக்டர்கள் முடிவு செய்வதில்லை. மாறாக அடைப்பு இருக்கும் இடத்தை பொறுத்து எந்த இடத்தில் உள்ளது, நீளமாக உள்ளதா, ரத்தக்கட்டியுடன் உள்ளதா, சுண்ணாம்பு படிந்துள்ளதா என்பதை பொறுத்து சிகிச்சை முறையை டாக்டர்கள் முடிவு செய்வர். இதில் நோயாளியின் தேர்வு ஏற்றுக் கொள்ளப்படாது.

- டாக்டர் சி.விவேக் போஸ்இதயநோய் சிகிச்சை நிபுணர் மதுரை

இரவில் நீண்ட நேரம் உறங்கினாலும் காலையில் எழும்போது எனக்கு உடல் சோர்வாக உள்ளது. இதற்கு காரணம், தீர்வு கூறுங்கள்.

-- பாலமுரளி, வடமதுரை

துாக்கம் என்பது உடலுக்கு மிகவும் அவசியமானது. நம் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. துாக்கத்தின் போது உடல் சில நிலைகளை கடக்கும். முதலில் ஏற்படுவதை 'நான் ரெம்' ஸ்லீப் என்பர். இந்நிலையில் உடல் தளர்வடையும், இதயத்துடிப்பு, மூச்சின் வேகம், நமது விழிப்புணர்வு நிலை, உடல் வெப்ப நிலை குறையும். இந்நிலை நமக்கு ஆழ்ந்த துாக்கத்தை தரும். அடுத்ததை 'ரெம் ஸ்லீப்' என்பர். நம் மூளையின் வேகம் அதிகரிக்கும். உடல் இயக்க ஆற்றல் குறையும். கனவுகள் வருவதும் அப்போது தான். அதனால் சராசரியாக உடலுக்கு 8 மணி நேர துாக்கம் அவசியம்.

ஆனால் இன்றைய தலைமுறையில் பலர் இரவு நேரங்களில் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கின்றனர். அதிகமாக சமூக வலை தளங்களை பயன்படுத்துகின்றனர். அப்போது கண்களில் கம்ப்யூட்டர், அலைபேசியின் ஒளிபடுவதினால் துாக்கத்தை தரும் ஹார்மோன் சுரப்பதில்லை. இது துாக்கத்தை குறைக்கவும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணியாகும். தினசரி உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதும், துாங்கும் முன் நல்ல இசை கேட்பது, புத்தகங்கள் படிப்பது நிம்மதியான துாக்கத்திற்கு வழி வகுக்கும்.

- டாக்டர் ஆர்.பாலகுருமூளை நரம்பியல் மன நல மருத்துவர், வடமதுரை

எனது உறவினருக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒரு முறைக்கு கூடுதலாக 15 நாட்கள் தள்ளிப்போகிறது. இயற்கை மருத்துவ சிகிச்சையில் தீர்க்க வழி இருக்கிறதா

-- எஸ்.பரஞ்ஜோதி,பெரியகுளம்

மாதவிடாய் பிரச்னையாக அதிக ரத்தப்போக்கு, குறைந்தளவு ரத்தப்போக்கு, நாட்கள் தள்ளிப்போகுதல் ஆகிய கர்ப்பப்பை பிரச்னைக்கு, மண்துகள்கள் அரைத்த 'மண்பட்டி' யை சம்பந்தப்பட்டவர் வயிற்றில் தினமும் 10 முதல் 20 நிமிடம் வைக்க வேண்டும். இதனை மருத்துவர் கண்காணிப்பில் தான் செய்ய முடியும். 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சிகிச்சையில் குணமாகும்.

-- டாக்டர் ஸ்ரீ லட்சுமியோகா மற்றும் இயற்கை மருத்துவம், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்

என்னுடைய நான்கு வயது மகனுக்கு பேச்சு சரியாக வருவதில்லை. என்ன செய்வது.

-அ.அன்பு, சிவகங்கை

குழந்தை எதை காதால் கேட்கிறதோ அதைத்தான் பேச தொடங்கும். அதனால் முதலில் குழந்தைக்கு காது கேட்கும் திறனை பரிசோதிக்க வேண்டும். இந்த பரிசோதனையை குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் இருந்தே செய்யலாம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு விட்டால் காது கேட்காமல், பேச முடியாத குழந்தையை பேச வைக்க முடியும். இவ்வாறு கண்டறியப்பட்டு வாய் பேச முடியாத குழந்தைக்கு அரசு மருத்துவமனைகளில் 8 லட்சம் வரையிலான உயரிய சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஐந்து வயதிற்குள் கண்டறியப்பட்ட குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் பேச வைத்துவிடலாம்.

- -டாக்டர் கே.விஜயகுமார்முதுநிலை உதவி பேராசிரியர் காது மூக்கு தொண்டை பிரிவுஅரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

டூவீலரில் அல்லது ரோட்டோரம் நடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டால் முதலுதவி பெறுவது எப்படி.

-- எஸ். முனியசாமி சிக்கல்

ரோட்டில் நடந்து செல்லும் போது அல்லது டூவீலரில் செல்லும் போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகும் போது உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவரை அவ்விடத்தில் இருந்து அகற்றி காற்றோட்டமான இடத்தில் அமர வைக்க வேண்டும்.

முதலுதவியை செய்ய வேண்டும். இடது பக்கமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். மூச்சை நன்றாக இழுத்து விடுகிறாரா என்பதை பார்க்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராக உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.

சுத்தமான துணியால் காயம் ஏற்பட்ட இடத்தில் கட்டு போட வேண்டும். உடனடியாக ஆம்புலன்ஸ் 108க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம்.

ரத்தப்போக்கு அதிகம் ஏற்படாதவாறு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

- டாக்டர் வி.சுகந்த்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வாலிநோக்கம்

நான்கு வயது குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் வருகிறது. இதனை தவிர்க்க என்ன செய்யலாம்.

- -கி.குருசாமி, ஸ்ரீவில்லிபுத்துார்

குளிர்காலத்தில் வைரசால் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது இது காற்றினால் பரவும் நிமோனியா வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். கோயில் திருவிழாக்கள், கல்யாண நிகழ்ச்சிகள் போன்ற அதிகளவில் மக்கள் சேரும் இடங்களுக்கு குழந்தைகள் சென்றால் இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்தால் சளி, காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

--- டாக்டர் காளிராஜ்அரசு மருத்துவர்ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனை---






      Dinamalar
      Follow us