ADDED : மே 31, 2024 05:34 AM

அலங்காநல்லுார் : அ.புதுப்பட்டியில் ரோட்டோரம் குவிக்கும் குப்பையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
அழகாபுரி ஊராட்சி அ.புதுப்பட்டியில் உள்ள அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. புதுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படும் குப்பையை இந்த ரோட்டோரம் குவித்து வருகின்றனர்.
பலத்த காற்று வீசும் போது குப்பையும், பிளாஸ்டிக் கழிவுகளும் ரோட்டின் குறுக்கே பறக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரம் பாதிக்கிறது. இதன் அருகே உள்ள மயான பகுதியில் இரும்பு கம்பிகளை பிரித்தெடுக்க டயர் மற்றும் உதிரி பாகங்களை எரிக்கின்றனர். இதனால் காற்று மாசுபடுகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.