/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உயர்கல்வித் தகுதி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
உயர்கல்வித் தகுதி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்கல்வித் தகுதி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்கல்வித் தகுதி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 03:41 AM
மதுரை : உயர் கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை பெற உரிமை உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தென் மாவட்டங்களில் சில அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பி.எட்., பிற முதுகலை பட்டப்படிப்பு முடித்து உயர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கவில்லை. அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
1969, 1993 அரசாணைபடி உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் பெற எங்களுக்கு தகுதி உள்ளது. ஊக்க தொகை வழங்க கோரிய எங்கள் கோரிக்கை 2020 மார்ச் 10ல் வெளியான அரசாணையின் குறிப்பிட்ட பிரிவை சுட்டிக்காட்டி கிடப்பில் போடப்பட்டது. மனித வளத்துறை 2023 அக்.,26ல் வெளியிட்ட அரசாணை படி அனைவருக்கும் ஒரே நேர தவணையாக மொத்த தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
2020 மார்ச் 10 அல்லது அதற்கு பின் உயர் தகுதியை பெறும் ஊழியர்களுடன் ஒரே சீரான முறை ஊக்க ஊதியம் வழங்க கோருவதை பரிசீலிக்கவில்லை. இது தன்னிச்சையானது. சட்டத்திற்கு புறம்பானது. உயர் கல்விதகுதிக்கான ஊக்க ஊதியத்திற்கு தடை விதித்து தமிழக அரசு 2023ல் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஊக்க ஊதியம் நிலுவை தொகையுடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.
மனுதாரர்கள் தரப்பு: ஊக்கத்தொகை விதிமுறைகளை மாற்றி மனுதாரர்களின் உரிமையை மனிதவளத்துறை பறித்துள்ளது. ஊக்க தொகையை ஒரே நேரத்தில் வழங்குவதாக மாற்றியமைக்க முடியாது.
அரசு தரப்பு: இது தொடர்பான மற்றொரு வழக்கில் 2023 வெளியான அரசாணையில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரியின் கொள்கை முடிவு நீதிதுறை மறு ஆய்வு வரம்பிற்குள் வராது. மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி: 2020 மார்ச் 10க்கு முன் உயர் கல்வி தகுதி பெற்ற, ஊக்கத்தொகை கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கதொகை பெற உரிமை உண்டு.2020 மார்ச் 10க்கு முன் உயர்கல்வி தகுதியைப் பெற்ற, ஊக்கதொகைக்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க உரிமை உண்டு. 2020 மார்ச் 10 அல்லது அதற்கு பின் உயர் கல்வி தகுதி பெறும் ஊழியர்களுக்கு ஒரே நேர தவணையாக வழங்க கொள்கை முடிவு அடிப்படையில் 2023ல் வெளியிட்ட அரசாணை உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.