/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நல்லாசிரியர்'களை அலைக்கழிப்பது நியாயமா? அடுத்த ஆண்டாவது கடைசி நேர தவிப்பை தவிர்க்குமா கல்வித்துறை
/
'நல்லாசிரியர்'களை அலைக்கழிப்பது நியாயமா? அடுத்த ஆண்டாவது கடைசி நேர தவிப்பை தவிர்க்குமா கல்வித்துறை
'நல்லாசிரியர்'களை அலைக்கழிப்பது நியாயமா? அடுத்த ஆண்டாவது கடைசி நேர தவிப்பை தவிர்க்குமா கல்வித்துறை
'நல்லாசிரியர்'களை அலைக்கழிப்பது நியாயமா? அடுத்த ஆண்டாவது கடைசி நேர தவிப்பை தவிர்க்குமா கல்வித்துறை
ADDED : செப் 04, 2024 07:12 AM

மதுரை : தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் விவரப் பட்டியலை கடைசி நேரத்தில் வெளியிடுவதால் விருது பெறும் ஆசிரியர்கள் நிம்மதியாக சென்னை சென்று திரும்ப முடியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு 'மாநில நல்லாசிரியர்' விருதை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் செப்.,5ல் வழங்குகிறது. இதற்காக சென்னையில் கல்வித்துறை சார்பில் பிரமாண்ட விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ளதால் அமைச்சர் உதயநிதி இவ்விருதுகளை வழங்குகிறார்.
செப்., 5ல் விழா நடக்கும் நிலையில் விருதுக்கான தேர்வு பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் செப்.,3 மாலை வெளியிடும் நடைமுறையை கல்வித்துறை பின்பற்றுகிறது. இதனால் விருது பெறுவோர் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதாக சர்ச்சை எழுகிறது. மத்திய அரசும் இதே நாளில் 'தேசிய நல்லாசிரியர்' விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்குகிறது. ஆனால் தேர்வானவர்கள் விவரம் விருது வழங்கும் நாளில் இருந்து குறைந்தது 10 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது. இதனால் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு விருது நிகழ்ச்சியில் நிம்மதியாக பங்கேற்க முடிகிறது. மாநில அரசின் விருது பட்டியல் கடைசி நேரம் அறிவிக்கப்படுவதால் அந்த விழாவில் பங்கேற்பது சவாலாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: விருது அறிவிக்கப்பட்ட சில மணிநேர அவகாசத்தில் 'தங்கள் மீது எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை' என அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று என்.ஓ.சி., சான்று பெறுவதும், சென்னைக்கு சென்று திரும்ப பஸ், ரயிலில் 'டிக்கெட் புக்கிங்' செய்வதும் ஆசிரியர்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது.
இந்தாண்டு 'எமிஸ்' இணையதளத்தில் தான் அனைவரும் விருதுக்கு விண்ணப்பித்தனர். ஆனாலும் அறிவிப்பில் வழக்கம் போல் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு போல், மாநில அரசும் நல்லாசிரியர் விருது ஆசிரியர்கள் பட்டியலை 10 நாட்களுக்கு முன் வெளியிட வேண்டும். நல்லாசிரியர்களை அலைக்கழிப்பதை தமிழக அரசு அடுத்தாண்டாவது தவிர்க்க வேண்டும் என்றனர்.