/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் 'ஸ்பீடு' மார்ச்சில் முதல்வர் துவக்கி வைக்க வாய்ப்பு உண்டா
/
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் 'ஸ்பீடு' மார்ச்சில் முதல்வர் துவக்கி வைக்க வாய்ப்பு உண்டா
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் 'ஸ்பீடு' மார்ச்சில் முதல்வர் துவக்கி வைக்க வாய்ப்பு உண்டா
பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளின் 'ஸ்பீடு' மார்ச்சில் முதல்வர் துவக்கி வைக்க வாய்ப்பு உண்டா
UPDATED : பிப் 20, 2025 07:20 AM
ADDED : பிப் 20, 2025 05:39 AM

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக அதிகரித்த பின் அதற்கு ஏற்ப கூடுதலாக 125 எம்.எல்.டி., குடிநீரை வழங்கும் வகையில் அம்ரூத் திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.1653.21 கோடியில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்து, பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மதுரை நகர் வரை 55.44 கி.மீ., நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்து கொண்டுவரப்படுகிறது.
37 மேல்நிலைத் தொட்டிகள், ஒரு தரைமட்ட தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 32 வார்டுகளில் 855 கி.மீ., நீளத்திற்கும், மாநகராட்சி மையப் பகுதியில் 57 வார்டுகளில் 813 கி.மீ., நீளத்திற்கும் குடிநீர் விநியோக குழாய்கள் பதிப்பும், வீடுகளுக்கு நேரடி இணைப்புகள் என 5 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 100 வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்க முடியும் என்பதே இத்திட்டத்தின் பயன்.
இத்திட்டம் 2024 டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. கமிஷனர்களாக இருந்த மதுபாலன், தினேஷ்குமார் வேகப்படுத்தியும் இன்னும் இத்திட்டம் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் மெத்தனம், ஒப்பந்ததாரர்களின் தாமதம் தான் பிரதான காரணமாக உள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்குவது இன்னும் சவாலாக உள்ளது. நகரின் மையப் பகுதியிலும் இப்பணிகள் 'பெண்டிங்' உள்ளது.
இதற்கிடையே 'மார்ச்சில் வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார்' என மாநகராட்சி உறுதியளித்துள்ளது. இந்நிலையில் தான் இப்பணி ஆமை வேகத்தை விட 'ஸ்லோ'வாக உள்ளது என அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது.
அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா கூறுகையில், ''இத்திட்டத்தை மார்ச்சில் முதல்வர் துவக்கி வைத்தாலும் சில வார்டுகளில் மட்டுமே குடிநீர் செல்ல வாய்ப்புள்ளது.
ஆமை வேகப் பணிகளை மறைக்க முதல்வர் பெயரை குறிப்பிட்டு மார்ச்சுக்குள் முடிப்போம் என தெரிவிக்கின்றனர். கோடை காலம் துவங்கினால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்குள் இத்திட்டத்தை முழுமையாக முடித்து வீடுகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும்'' என்றார்.

