/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்திலே விதைக்கும் அங்கன்வாடி ஆசிரியை' ஜெயிக்க வைக்கும் ஜெய்லானி
/
ஐந்திலே விதைக்கும் அங்கன்வாடி ஆசிரியை' ஜெயிக்க வைக்கும் ஜெய்லானி
ஐந்திலே விதைக்கும் அங்கன்வாடி ஆசிரியை' ஜெயிக்க வைக்கும் ஜெய்லானி
ஐந்திலே விதைக்கும் அங்கன்வாடி ஆசிரியை' ஜெயிக்க வைக்கும் ஜெய்லானி
ADDED : மார் 08, 2025 08:08 AM

அங்கன்வாடிக்கு வரும் 3, 4, 5 வயது குழந்தைகளை குதுாகலப்படுத்தி அவர்களை நாளைய கல்விக்கு ஆர்வமுடன் அழைத்து செல்லும் துடிப்பான பணியை செய்து வருகிறார் விருதுநகர் சங்கரலிங்கபுரம் அங்கன்வாடி ஆசிரியை ஜெய்லானி. இவருக்கு டில்லியில் நடந்த 2025 குடியரசு தினவிழாவில் சிறந்த முன்பருவ கல்விக்கான ஆசிரியர் விருதை பெண்கள் நல குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் அன்னபூர்ணாதேவி வழங்கினார்.
குழந்தைகளுக்கு பொதுவிஷயங்களை கற்றுத்தருவது, முக்கிய தினங்களில் அவர்களை ஊர்வலமாக அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அங்கன்வாடியில் படித்து முடிக்கும் போது நிறைவு விழா நடத்தி பெற்றோரை கவுரவிப்பது, சிறுவயதிலேயே நுால்கள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நுாலகத்திற்கு அழைத்து செல்வது என இவரது கல்விச் சேவைகளை பாராட்டி ஏற்கனவே மாநில அரசு கவுரவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசும் தற்போது கவுரவித்துள்ளது.
அவர் கூறியதாவது: இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதிக்கின்றனர். என்னால் முடிந்த அளவு கல்வியில் சேவை செய்கிறேன். நான் கடந்து வந்த பாதையை விட இன்று பெண்களுக்கு நல்ல சூழல் உள்ளது.
பெண்கள் எல்லா தளங்களிலும் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2017ல் அங்கன்வாடி ஆசிரியை ஆனேன். எனக்கு குழந்தைகளோடு குழந்தையாக இருப்பது மிகவும் பிடிக்கும். இதனாலேயே குழந்தைகளுடன் ஐக்கியமாகி விட்டேன். அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் போது வித்தியாசமான உணர்வை பெறுகிறேன். அவர்களுக்கும் என்னை பிடித்து விட்டது.
'உங்களை எனக்கு பிடிக்கும் டீச்சர்' என்று அவர்கள் கூறுவது தான் எனக்கு வாழ்வில் கிடைக்கும் சிறந்த பாராட்டு. பாடல்களை சொல்லி கொடுக்கும் போதும், ஊக்கமளிக்கும் வகையில் நடனமாடி புதுமையாய் கற்று கொடுக்கும் போதும் அவர்களும் ஆர்வத்தோடு கற்று வருகின்றனர்.
நாமும் குழந்தைகளுக்கு ஏற்ப மாறினால் தான் அவர்களை நாம் முன்னேற்ற முடியும்.
குழந்தைகளின் தனித்திறனை அடையாளம் கண்டு விடுவேன். அதனை அந்தந்த பெற்றோரிடம் கூறுவேன். அவர்கள் துவக்கப்பள்ளிக்கு சென்ற பிறகு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்துவேன். இவ்வாறு பல குழந்தைகள் போட்டிகளில் பங்கெடுத்து பரிசு பெற்றுள்ளனர். குழந்தைகளுக்கு ஐந்து வயது வரை அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதில் எந்த அளவுக்கு நல்ல விஷயங்களை விதைக்கிறோமோ எதிர்காலத்தில் அவ்வளவு மாற்றத்தை சந்திப்பர்.
பெண்கள் தினத்தில் நான் கூற விரும்புவது, தாய்மார்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய்மார்களும் மேலும் படிக்கலாம். போட்டித்தேர்வுக்கு கூட படிக்கலாம். ஒரு வேளை அரசு பணிக்கு தேர்வானால் குடும்பத்தின் பொருளாதார சூழல் மாறும். கல்வி, பணி வாய்ப்புகள் மேம்படும் என்றார்.
- -சு.வீரமணிகண்டன்