/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திக்கு விஜயத்தில் கடம்ப இலை, பூமாலை
/
திக்கு விஜயத்தில் கடம்ப இலை, பூமாலை
ADDED : ஏப் 21, 2024 04:31 AM

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியம்மன் போர் செய்வதற்கான திக்கு விஜயத்தின் போது கடம்பமாலை அணிந்ததாக வரலாறு உண்டு. அதை நினைவுபடுத்தும் வகையில் 2 ஆண்டுகளாக மாவட்ட பசுமை குழு உறுப்பினர் கார்த்திகேயன் கடம்ப மரத்தின் இலை, பூக்களால் ஆன மாலையை அம்மனுக்கு சூட்டி வருகிறார்.
அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த மதுரைக்கு கடம்பவனம் என்றும் பெயர் உண்டு. கடம்ப மர இலைகள் மிகப் பசுமையாக இருப்பதால் சங்க இலக்கியங்களில் பாசிலை என்றும் கூறப்படுகிறது.
நீள்வட்ட வடிவில் இலை காணப்படும்; சித்திரையில் தொடங்கி ஆனி மாதம் வரை பூ பூக்கும். பூக்கள் கொத்து கொத்தாக உருளை வடிவில் வெள்ளை நிறத்தில் ஆரம்பித்து ஆரஞ்சு நிறத்திற்கு மாறும்.
மரத்திலேயே இருந்தால் 20 நாட்கள் வரை பூக்கள் வாடாமல் இருக்கும். மரத்தில் இருந்து பறித்தால் ஒரே நாளில் வாடிவிடும்.
திருவிளையாடற் புராணம் எழுதிய பரஞ்ஜோதி முனிவர் மதுரையை கடம்பவனம் என்றும் வேப்பம்பூ மாலை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனை 'கடம்பவனவாசினி', 'கடம்பவனப்பூவை' என்று பாடியுள்ளார். மதுரைக்கு கடம்பவனம் என்னும் சிறப்புப் பெயர் அளித்த கடம்ப மரம் இன்று மிகக்குறைந்த அளவில் உள்ளது.
இடையப்பட்டி காடுகளில் பரவலாக உள்ளது. அங்கு மட்டுமே இதன் விதைகள் மூலம் கன்றுகள் பரவி வருகின்றன.
'நறுங்கடம்பின் பாசிலைத் தெரியல்' என்று தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளது போல குளிர்ச்சியான, நறுமணமான கடம்ப மரத்தின் பூவோடு பசுமையான இலையைச் சேர்த்து கோர்த்து மாலையாக்கி மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் நிகழ்வின் போது அணிவிக்கப்பட்டது.
அந்த வரலாற்று நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் இரண்டாண்டுகளாக திக்கு விஜயத்தின் போது கோயில் நிர்வாக அனுமதியுடன் மீனாட்சியம்மனுக்கு கடம்ப இலை, பூமாலை அணிவித்து வருகிறேன். கடம்ப மரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் நறுங்கடம்பு என்ற நுாலையும் எழுதியுள்ளேன் என்றார்.

