/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கப்பலுார் சுங்கச்சாவடி: தமிழக அரசு விளக்கம்
/
கப்பலுார் சுங்கச்சாவடி: தமிழக அரசு விளக்கம்
ADDED : ஜூலை 30, 2024 05:52 AM

சென்னை : மதுரை மாவட்டம், கப்பலுார் சுங்கச்சாவடியில், அதை சுற்றியுள்ள மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு அறிக்கை: கப்பலுாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில், உள்ளூர் வாகன ஓட்டிகளிடம், சுங்ககட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பாக, மதுரை மாவட்ட கலெக்டர், கடந்த 9ம் தேதி கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், உள்ளூர் வாகனங்களுக்கு ஏற்கனவே, 2020ம் ஆண்டுக்கு முன் அளித்த விலக்கு தொடரவேண்டும்என்று, கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக, கடந்த 18ம் தேதி, தலைமை செயலர் சிவ்தாஸ்மீனா தலைமையில், சென்னையில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர் உறுதி அளித்துள்ளார்.
கப்பலுார் சுங்கச்சாவடியை சுற்றி வசிக்கும் மக்கள் பாதிக்காதவாறு, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.