ADDED : செப் 09, 2024 04:44 AM

அவனியாபுரம் : மதுரை வில்லாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செப். 6ல் விக்னேஸ்வர பூஜையுடன் முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோயில் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, தெற்கு சரக ஆய்வாளர் மதுசூனன், நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி கலந்து கொண்டனர். கோயில் பரம்பரை அறங்காவலர்கள் மரகதம், தனசேகரன், காளிதாஸ், சுந்தரம், ராமச்சந்திரன், கோபால், ரமேஷ், செந்தில்குமார் ஏற்பாடுகள் செய்தனர்.
வாடிப்பட்டி
குலசேகரன் கோட்டையில் நவ ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை கோ, பூர்ணாஹூதி பூஜையை தொடர்ந்து பாலாஜி, கோபாலகிருஷ்ணன் பட்டாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமிக்கு அலங்கார, ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை நவமாருதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.
சோழவந்தான் தெற்கு ரதவீதியில் பொன்னர்-சங்கர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 4ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, விநாயகர், சப்த கன்னிமார், தங்காள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையை நடந்தது.
வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு அலங்கார, ஆராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.