/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொடர் ஜல்லிக்கட்டு போட்டியால் ஜனவரி - மார்ச் வரை ஓய்வின்றி வேலை; மனஉளைச்சலில் கால்நடை பராமரிப்பு பணியாளர்கள்
/
தொடர் ஜல்லிக்கட்டு போட்டியால் ஜனவரி - மார்ச் வரை ஓய்வின்றி வேலை; மனஉளைச்சலில் கால்நடை பராமரிப்பு பணியாளர்கள்
தொடர் ஜல்லிக்கட்டு போட்டியால் ஜனவரி - மார்ச் வரை ஓய்வின்றி வேலை; மனஉளைச்சலில் கால்நடை பராமரிப்பு பணியாளர்கள்
தொடர் ஜல்லிக்கட்டு போட்டியால் ஜனவரி - மார்ச் வரை ஓய்வின்றி வேலை; மனஉளைச்சலில் கால்நடை பராமரிப்பு பணியாளர்கள்
ADDED : மார் 09, 2025 04:53 AM
மதுரை : மதுரையில் ஜன. 15 அவனியாபுரத்தில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிவில்லாமல் தொடர்வதால் ஓய்வின்றி மனஉளைச்சலுக்கு ஆளாவதாக கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் புலம்புகின்றனர்.
நேற்று (மார்ச் 8) சக்குடி ஜல்லிக்கட்டு போட்டிக்கு அதிகாலை 5:00 மணிக்கு வந்து மாலையில் அனைத்து காளைகளும் சென்ற பிறகே கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் சென்றனர். இன்று கீழக்கரை ஜல்லிக்கட்டு அரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் பணியாளர்கள் ஓய்வின்றி வேலை பார்த்து உடல்நலம் கெட வேண்டியது தான் என கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: கீழக்கரையில் 22 ஏக்கரில் கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கு கட்டப்பட்டது. ஆனால் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் பாரம்பரிய வாடிவாசலில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவோம் என உள்ளூர் கமிட்டியினர் தெரிவித்ததால் ஜன.15 முதல் 17 வரை இந்த மூன்று ஊர்களிலும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி இரண்டாண்டுகளாக நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு அரங்கு கட்டி வீணாகி விட்டதாக மக்கள் மத்தியில் பேச்சு வரக்கூடாது என்பதற்காக தேவையின்றி தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வேதனையாக உள்ளது.
மதுரையில் உள்ள பத்து தொகுதிகளுக்கும் வாரம் ஒருநாள் ஜல்லிக்கட்டு என இன்னும் 8 வாரங்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு முறை சனி, ஞாயிறுகளில் போட்டி நடக்கும் போதும் கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள் என 30 முதல் 45 பேர் அடங்கிய குழு செல்ல வேண்டும். தினமும் 13 மணி நேரம் அரங்கிலேயே இருக்க வேண்டும். மற்ற நாட்களில் அலுவலக வேலை செய்ய வேண்டும்.
எங்கள் பணிகளை யார் பார்ப்பது
கீழக்கரையில் அடுத்தடுத்து 8 வாரங்களுக்கு தொடர் ஜல்லிக்கட்டு நடத்தினால் எங்களுக்கு விடுமுறை எப்போது. ஜனவரியில் ஜல்லிக்கட்டு பணிகளுடன் மாடுகளுக்கான கோமாரி தடுப்பூசி பணியையும் முடித்தோம். இதற்கிடையில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசி செலுத்தியுள்ளோம். மார்ச்சில் 4 முதல் 8 மாத கிடாரி கன்றுகளுக்கு கருச்சிதைவு தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதற்கிடையே கால்நடை கணக்கெடுப்பு பணிகளும் தொடர்ந்து நடக்கிறது.
எங்களின் துறைசார்ந்த வேலைகளை செய்ய முடியாமல் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஒட்டுமொத்த கால்நடை பராமரிப்பு பணியாளர்களையும் முடக்கியுள்ளனர். விடுமுறை என்பதே இல்லாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். ஜனவரியில் தொடங்கி ஜன.31க்குள் ஜல்லிக்கட்டு போட்டிகளை முடிக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் மட்டுமே எங்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.