ADDED : மார் 09, 2025 04:52 AM
மதுரை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்ற லோக்அதாலத்தில் 4082 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.36 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரத்து 219 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஆர்.சக்திவேல், எம்.ஜோதிராமன், உறுப்பினர்களான ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜான் ஆர்.டி.சந்தோசம், மதுர சேகரன், உதயன், வழக்கறிஞர்கள் காஜா முகைதீன், கிருஷ்ணவேணி, ஜெயா இந்திரா பட்டேல், டாக்டர் திருமலை முருகன் விசாரித்தனர். 323 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 34 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. ரூ. 5 கோடியே 37 லட்சத்து 19 ஆயிரத்து 662 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பதிவாளர்(நீதித்துறை) அப்துல் காதர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் மதுரை, உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூர் நீதிமன்றங்களில் 22 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. நீதிபதிகள் நாகராஜன், ரோகிணி, ஜோசப் ஜாய், அல்லி, சார்பு நீதிபதிகள் பாரதிராஜா, காமராஜ், வேலுச்சாமி, நீதித்துறை நடுவர்கள், சிவில் நீதிபதிகள் விசாரித்தனர். மொத்தம் 4194 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 4048 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. ரூ.30 கோடியே 85 லட்சத்து 21 ஆயிரத்து 557 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
17 குடும்பநல வழக்குகளில் தம்பதியரிடையே சமரசம் ஏற்பட்டது. மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணன் செந்தில்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.