/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
24 மணி நேர சேவையை பயன்படுத்தாத மதுரை விமான நிலையம்
/
24 மணி நேர சேவையை பயன்படுத்தாத மதுரை விமான நிலையம்
24 மணி நேர சேவையை பயன்படுத்தாத மதுரை விமான நிலையம்
24 மணி நேர சேவையை பயன்படுத்தாத மதுரை விமான நிலையம்
ADDED : செப் 03, 2024 04:41 AM
மதுரை : மதுரை விமான நிலையத்தில் உள்ள 24 மணி நேர சேவையை பயன்படுத்துவதோடு இரு வழி விமான நிலையங்கள் சேவை ஒப்பந்தங்களில் (பாசா) மதுரையை சேர்க்க வேண்டும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர் சுரேஷிடம் வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை வந்த சுரேைஷ சங்கத் தலைவர் ரத்தினவேல், செயலாளர் திருப்பதி ராஜன், துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், சரவண குமரன் சந்தித்தனர். இச்சந்திப்பு குறித்து அவர்கள் கூறியதாவது: தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மதுரை விமான நிலையம் 24 மணி நேர சேவையில் ஈடுபடாமல் உள்ளது. இதன் இயக்குநர் 24 மணி நேரமும் செயல்பட தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். இரவு நேரத்திலும் செயல்பட்டால் அதிகளவில் உள், வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்ல முடியும். 24 மணி நேர சேவை இல்லாததால் பல சர்வதேச விமான சேவைகள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன. இதனால் தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஏப்.1 முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் செயல்படுத்தவில்லை.
பயணிகளை அதிகம் கையாளாத சில விமான நிலையங்களை உருவாக்கும் போதே சர்வதேச விமான நிலையம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள 10 சுங்க விமான நிலையங்களில் அதிகளவில் பன்னாட்டு பயணிகளை கையாளும் மதுரை விமான நிலையத்தை இன்னுமும் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவில்லை.
மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் அதிகளவில் உள்ளனர். துபாய், சார்ஜா, அபுதாபி, மலேசியா, சிங்கப்பூர், தோஹா விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி சேவையைத் துவக்க தயாராக உள்ளன. மத்திய அரசு அனுமதி கொடுக்க மறுப்பதன் காரணம் புரியவில்லை. இந்நாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை மத்திய விமான போக்குவரத்துத் துறை சேர்க்க வேண்டும்.
மதுரை விமான நிலையத்தில் போதிய மத்திய தொழில் துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பணியாளர்கள் இல்லாததே தடையாக உள்ளது. பணியாளர்களை ஒதுக்குவது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு கடினமான வேலையும் இல்லை. தாமதமின்றி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
விமானப் போக்குவரத்து அமைச்சரிடம் இக்கோரிக்கைகளை எடுத்துச் செல்வதாக ஆணையத் தலைவர் உறுதியளித்தார் என்றனர். விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் உடனிருந்தார்.