/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு குறித்து விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு குறித்து விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு குறித்து விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு குறித்து விசாரணை; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 11, 2024 05:41 AM

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஒப்பந்தப் பணி முறைகேடு தொடர்பாக விசாரிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் 2015 ல் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை காமராஜ் பல்கலை பாதுகாப்புக்குழு நடத்துகிறோம். பல்கலை துணைவேந்தராக கல்யாணி பதவி வகித்தார்.
அப்போது சில சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளர் ஒப்புதலுடன் 2015 ஜன.,21 ல் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி தொலைநிலைக் கல்வி பாடத் திட்டம், தேர்வுமுறையில் மின்னணு (இ-கன்டன்ட்) முறையை கொண்டுவர ரூ.9 கோடியே 32 லட்சத்து 89 ஆயிரத்து 500 ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
இதை செயல்படுத்த பல்கலை கல்விக்குழு ஒப்புதல் பெற வேண்டும். அத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய இளநிலை, முதுகலை பாடத்திட்ட வாரியம் பல்கலையிடம் விபரம் கோரியது.
அது பற்றி அடுத்த கல்விப் பேரவை கூட்டத்தில் விவாதிக்கலாம் என பல்கலை தரப்பில் பதில் அளித்தனர். இச்சூழ்நிலையில் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. மின்னணு முறையிலான பாடம், ஆன்லைன் தேர்விற்கான திட்டத்தை உருவாக்க ரூ.37 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஒருவர் டெண்டர் கோரினார். ஆனால் பல்கலை நிர்வாகம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூ.6 கோடிக்கு ஒப்பந்தப் பணி அனுமதித்தது.
மற்றொரு மின்னணு முறை திட்டத்தை நிறைவேற்ற அதே நிறுவனம் ரூ. 7 கோடியே 80 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஒப்பந்தப் பணி கோரியது. வேறு நிறுவனம் ரூ.6 கோடியே 30 லட்சத்திற்கு டெண்டர் கோரியது. ஆனால் கூடுதலாக ரூ.1 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஒப்பந்தப் பணி கோரிய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கினர்.
சி.பி.ஐ., மற்றும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு 2015 ஏப்.,21 ல் புகார் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. முறைகேடு பற்றி சி.பி.ஐ.,விசாரிக்க, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு: பல்கலை முன்னாள் துணைவேந்தர், அப்போதைய சிண்டிகேட் உறுப்பினர்கள், பதிவாளர் மீது மனுதாரர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2014--15 ம் ஆண்டிற்கான தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என இந்நீதிமன்றம் விசாரித்தது.
முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. 2014- 15 தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்து முடிந்தவரை விரைவாக 4 மாதங்களில் நடவடிக்கை மேற்கொள்வார்.
இவ்வாறு உத்தர விட்டனர்.

