/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் முன் கண்ணீர் வடித்த ம.தி.மு.க., செயலரால் பரபரப்பு
/
கலெக்டர் முன் கண்ணீர் வடித்த ம.தி.மு.க., செயலரால் பரபரப்பு
கலெக்டர் முன் கண்ணீர் வடித்த ம.தி.மு.க., செயலரால் பரபரப்பு
கலெக்டர் முன் கண்ணீர் வடித்த ம.தி.மு.க., செயலரால் பரபரப்பு
ADDED : பிப் 22, 2025 01:57 AM

மதுரை:மதுரை மாவட்டம், செல்லம்பட்டி நெல் கொள்முதல் மையத்தில், கமிஷனுக்காக மூட்டைகளை எடைபோட விடாமல், அப்பகுதி தி.மு.க., ஒன்றிய செயலர் ஒருவர் ஐந்து நாட்களாக அலைக்கழித்ததாக, கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., ஒன்றிய செயலரான விவசாயி கலெக்டர் சங்கீதாவிடம் தேம்பி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறைதீர் கூட்டத்தில் விவசாயி மணவாளக்கண்ணன் பேசியதாவது:
செல்லம்பட்டியில், தி.மு.க., ஒன்றிய செயலர் சுதாகரன், காசு கொடுத்தால் தான் நெல் மூட்டைகளை, கொள்முதல் மையத்தில் எடை போட அனுமதிக்கிறார். என் நெல் மூட்டைகளை ஐந்து நாட்கள் எடை போடாமல் நிறுத்தி வைத்து, என்னை அலைக்கழித்தார்.
40 கிலோ மூட்டைக்கு, 70 ரூபாய் கமிஷன் கேட்கின்றனர். மாநில அரசு சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு, 10 ரூபாய் தருகிறது.
அதுபோக விவசாயிகளும் ஒரு மூட்டைக்கு, 25 ரூபாய், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு, 25, உள்ளூர் பிரமுகர்களுக்கு, 20 ரூபாய் வீதம் கொடுத்தால் நெல், கொள்முதல் மையமே செயல்படும். இல்லாவிட்டால் மையத்தை நடத்தவிட மாட்டார்.
பேசி பயனில்லை
மூன்றாண்டுகளாக இப்படி தான் இருந்தது என்றாலும், இந்த முறை எல்லை தாண்டுகிறார். எல்லோரின் ஆதரவுடன் தான் கமிஷன் வசூலிக்கின்றனர். யாரிடமும் பேசி ஒரு பயனும் இல்லை. கலெக்டர் சங்கீதாவிடமும் தெரிவித்தேன். 'யாரிடம் சொன்னாலும் நெல்லை எடை போட விடமாட்டேன்' என்கிறார் சுதாகரன்.
இன்னொருவர் வாயிலாக அவருக்கு பணம் கொடுத்த பின் தான் எடை போட அனுமதித்தனர். விவசாயிகளிடம் மூட்டைக்கு 65 முதல் 80 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். எங்கள் கட்சி தலைமையிடமும் தெரிவித்துவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வது.
இவ்வாறு பேசினார்.
கலெக்டர் சங்கீதாவிடம் ஆதங்கத்தை தெரிவித்த போது, தேம்பி அழுத மணவாளக்கண்ணன், வெளியே வந்த பின்னும் அழுது கொண்டே இருந்தார். பத்திரிகையாளர்கள் சமாதானப்படுத்திய போது, உள்ளே பேசியதையே மீண்டும் பேட்டியாக தேம்பிக் கொண்டே கூறினார். சக விவசாயிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.
உண்மை இல்லை
செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் சுதாகரன் கூறுகையில், ''கடந்த 2019ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் மணவாளக்கண்ணன் சுயேச்சையாக போட்டியிட்டு ஓட்டை பிரித்ததால், தி.மு.க., கவுன்சிலர் தோற்றார்.
''அ.தி.மு.க., வெற்றி பெற்றது. யூனியன் சேர்மன் பதவியை அ.தி.மு.க., கைப்பற்றியது. அப்போது முதல் எது நடந்தாலும் எங்கள் மீது குற்றம் சொல்கிறார். அவர் சொல்வதில் உண்மையில்லை,'' என்றார்.

