ADDED : ஜூன் 25, 2026 07:22 PM
மதுரை: அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நேற்று மதுரை வந்தார். அவரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வரவேற்றார். பின்னர் அண்ணாநகர் சாத்தமங்கலம் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் ஆய்வு செய்தார். அவருடன் மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மதார் பதுருதீன், ஆர்.டி.ஓ., கருணாகரன் உட்பட அதிகாரிகள் சென்றனர்.
விடுதியின் சமையலறை, உணவருந்தும் அறை, தங்கும் அறைகளுக்கு சென்று மாணவர்களிடம் குறைகேட்டார். உணவின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்ட அவர், உணவை ருசித்துப் பார்த்தார். பழுதடைந்த மின்ஒயர்களை சீரமைக்கவும், சேதமடைந்த கொசுவலைகளை மாற்றி அமைக்கவும் அறிவுறுத்தினார். ரூ.5 கோடியில் கட்டப்படும் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார். அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கூடுதல், புதுப்பிக்கப்பட்ட நுால்களை வழங்க உத்தரவிட்டார்.
ஒத்தக்கடையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சார்பில் விடுதி மாணவர்களுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த சமையல்கூடத்தை பார்வையிட்டார். செக்கானுாரணி கள்ளர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளியில் கற்பிக்கப்படும் இசைப் பயிற்சிகளை மாணவர்கள் வெளிப்படுத்தும் வகையில் டிரம்ஸ், கீபோர்டு வாசித்ததை பாராட்டினார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்கள் பங்கேற்ற உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
