/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முல்லை பெரியாறு குடிநீர்ஜூலையில் கிடைக்க வாய்ப்பு
/
முல்லை பெரியாறு குடிநீர்ஜூலையில் கிடைக்க வாய்ப்பு
ADDED : மே 23, 2024 03:33 AM
மதுரை: முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் வரும் ஜூலையில் வீடுகளுக்கு வினியோகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி 100 வார்டுகளுக்கும் மக்களின் ஒரு நாள் குடிநீர் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால் தற்போது வைகை அணை, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 192 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. மீத தேவையை பூர்த்தி செய்ய ரூ.1295.76 கோடியில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் 5 கட்டங்களாக நடக்கின்றன. தற்போது இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனால் ஜூலையில் வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் வினியோகம் துவங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோயர் கேம்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை உள்ளிட்ட மேல்நிலை தொட்டிகளுக்கு கொண்டுவரும் பணி முடிவுற்றுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட நீர்அழுத்த சோதனைகள் (ஹைட்ரோ டெஸ்ட்) வெற்றிகரமாக முடிந்துள்ளது. 90 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டது. டி.வி.எஸ்., நகர் உட்பட சில இடங்களில் 5வது கட்டப் பணிகளில் குழாய்கள் பதிப்பு பணிகள் நடக்கவுள்ளன. 5ம் கட்ட பணிகள் 2025 டிசம்பரில் முடியும் என்றாலும், ஜூலையில் முதற்கட்டமாக 15 வார்டுகள் வரை இத்திட்ட குடிநீர் வினியோகம் துவங்கிட வாய்ப்புள்ளது. திட்ட மதிப்பும் 18 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

