ADDED : மார் 05, 2025 05:53 AM

மதுரை: மதுரை அண்ணாநகர், அலங்காநல்லுாரில் நடந்த வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆட்டோ டிரைவர்கள் உட்பட 4 பேருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பாண்டிகோவில் அருகே பாண்டியன் நகர் பிச்சைபாண்டி 33. ஆடுகள் வளர்த்தார். மீன் பிடிப்பில் ஈடுபட்டார். இவரது உறவினர்கள் சிலரை அதே பகுதி முத்துக்குமார் 33, தாக்கினார்.
இதை தட்டிக் கேட்ட பிச்சைபாண்டியை 2015 ல் கத்தியால் குத்தி கொலை செய்தார். அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து மதுரை 5 வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.
நாகமலை புதுக்கோட்டை ஆட்டோ டிரைவர் வீரா. அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கும் ஆட்டோ டிரைவர்கள் கீழக்குயில்குடி ஜெயக்குமார் 39, நாகமலை புதுக்கோட்டை ராஜா 39, ராஜிவ்காந்தி 36, இடையே தொழில் போட்டியில் முன்விரோதம் ஏற்பட்டது.
அவர்கள் சமரசம் பேசுவதாகக்கூறி 2015ல் குமாரம் அருகே அரியூர் கண்மாய்க்கு வீராவை அழைத்துச் சென்று கொலை செய்ததாக ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது அலங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர். மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.5000 அபராதம் விதித்து மதுரை 3 வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உத்தரவிட்டார்.