ADDED : செப் 12, 2024 05:03 AM
மதுரை: மதுரை தமிழிசைச் சங்கம் ராஜா முத்தையா மன்றத்தில், ராஜா அண்ணாமலைச் செட்டியார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு இசை, பேச்சுப் போட்டிகள் செப். 22ல் நடக்க உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் செப்.21 க்குள் தமிழிசைச் சங்கம், ராஜா முத்தையா மன்றம், அம்பேத்கர் சாலை, மதுரை-20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இசைப் போட்டியில் 5 நிமிடங்களில் சுப்ரமணியபாரதி, கோபாலகிருஷ்ண கோகலே, பாபநாசம் சிவன், தேவாரம், திருப்புகழ் பாடல்களில் ஏதேனும் 2 பாடல்களை ராக, தாளத்துடன் பாட வேண்டும். 1- 5, 6 -10, 11,12 மற்றும் கல்லுாரிகள் என பிரிவுகளில் போட்டி நடத்தப்படும்.
பேச்சுப் போட்டியில் 6 - 10, 11, 12 மற்றும் கல்லுாரிகள் என மூன்று பிரிவுகளில் போட்டி நடக்கும். பள்ளி மாணவர்களுக்கு, 'பன்னிரு திருமுறைகளால் நாம் பெறும் பயன்கள்'' அல்லது 'தமிழிசையும், இறை உணர்வும்' என்ற தலைப்பில் நடைபெறும். கல்லுாரி மாணவர்களுக்கு, 'அண்ணாமலை அரசர் கால தமிழ் கல்வி வளர்ச்சி' என்ற தலைப்பு அல்லது கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் இசைத் தொண்டு அல்லது அருணாசல கவிராயரின் தமிழிசைத் தொண்டு அல்லது கவியோகி சுந்தானந்த பாரதியின் தமிழிசைத் தொண்டு என்ற தலைப்பில் போட்டி நடைபெறும். செப்.30ல் பரிசளிக்கப்படும் என மேலாளர் பழனியப்பா தெரிவித்துள்ளார்.

