/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாங்க தான் கெத்து :பிளஸ் 2 தேர்ச்சியில் இந்தாண்டும் மாணவிகள் சாதனை: மாவட்ட தேர்ச்சி, மாநில ரேங்க்கில் மதுரை பின்னடைவு

ADDED : மே 07, 2024 05:38 AM

மதுரை: மதுரையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று 'நாங்க தான் எப்பவும் கெத்து' என நிரூபித்துள்ளனர். அதே நேரம் மாவட்ட அளவிலான தேர்ச்சி கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் 324 பள்ளிகளில் 16,176 மாணவர்கள், 17,508 மாணவிகள் என மொத்தம் 33,684 பேர் தேர்வு எழுதியதில் 32,064 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.19. இதில் மாணவர்களை விட (15,015) மாணவிகளே (17,049) அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர்.
'சென்டம்' 2192
கடந்தாண்டை (95.84 சதவீதம்) 0.65 சதவீதம் தேர்ச்சி சரிந்து மாநில அளவில் 15வது ரேங்க்கில் இருந்த மதுரை இந்தாண்டு 16வது இடத்திற்கு பின்தங்கியது. மாவட்ட அளவில் 25 அரசு பள்ளிகள் உட்பட 134 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. வழக்கம் போல் மெட்ரிக் பள்ளிகள் 98.95 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளன.
அரசு பள்ளிகள் 90.65 சதவீதம், உதவிபெறும் பள்ளிகள் 94.83 சதவீதம், மாநகராட்சி பள்ளிகள் 91.62 சதவீதம் என தேர்ச்சி பெற்றுள்ளன. அதிகபட்சமாக வேளாண் அறிவியலில் 466 மாணவர்களும், குறைந்தபட்சமாக ஆங்கிலத்தில் ஒருவர் என 2192 பேர் பல்வேறு பாடங்களில் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர். கல்வி மாவட்ட அளவில் மதுரை 95.78 சதவீதம் பெற்று முதலிடத்திலும், மேலுார் 94.68 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளன. மாவட்டத்தில் ஒத்தக்கடை அரசு ஆண்கள் பள்ளி 55.74 சதவீதம், பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் பள்ளி 56.52 சதவீதம் என மிக குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளன.
சிறையில் 'ஆல் பாஸ்'
மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 15 தண்டனை கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். அதில் 536 மதிப்பெண்கள் பெற்று ஆரோக்கிய ஜெய பிரபாகரன், 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்று அலெக்ஸ் பாண்டியன், அருண்குமார் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பெற்றனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை டி.ஐ.ஜி., பழனி, கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பாராட்டினர்.