/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
/
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
இஷ்டம் இருந்தால் 'நீட்' தேர்வு கஷ்டமில்லை மதுரையில் சாதித்த மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 07, 2024 06:26 AM

மதுரை: 'தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அரசியலாக்குவதை போல் 'நீட்' தேர்வு கஷ்டமாக இல்லை; இஷ்டப்பட்டு படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம்' என மதுரையில் சாதித்த மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பிளஸ் 2க்கு பின் இளங்கலை மருத்துவ படிப்புப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வை மாவட்டத்தில் 9504 பேர் எழுதினர். 7884 பேர் தகுதி பெற்றனர்.
சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் மட்டுமல்லாமல் அரசு, உதவிபெறும் மாணவர்களும் 200க்கு மேற்பட்டோர் தகுதி பெற்றனர். சாதனை மாணவர்கள் கூறியதாவது:
நீட் எளிதே
ராகேஷ் கண்ணன், தெப்பக்குளம்: மகாத்மா குளோபல் கேட்வே சி.பி.எஸ்.இ., பள்ளியில் படித்தேன். 'நீட்' நுழைவு தேர்வில் 706 மதிப்பெண்பெற்றேன். அப்பா பிரதீப் டாக்டர். இதனால் நானும் டாக்டராக வேண்டும் என்ற கனவில் படித்தேன். பிளஸ் 1 படிக்கும் போதே பள்ளியில் ஏற்பாடு செய்த கோச்சிங் மையத்தில் படித்தேன். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தி படிக்க வைத்தனர்.
இத்தேர்வில் விலங்கியல் பகுதி எளிதாக இருந்ததால் 706 மதிப்பெண்கள் பெற முடிந்தது. என்.சி.இ.ஆர்.டி., பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள்கேட்கப்பட்டிருந்தன. திட்டமிட்டால் இத்தேர்வு எளிதே.
இஷ்டம் என்றால் கஷ்டமில்லை
பூஜா, திருமங்கலம்: அனுப்பானடி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி போதி கேம்பஸில் படித்தேன். இத்தேர்வில் 690 மதிப்பெண் பெற்றேன். பிளஸ் 1ல் இருந்தே வழக்கமான பாடங்கள் தவிர தினம் 6 மணி நேரம் ஒதுக்கி இத்தேர்வுக்கு படித்தேன். அதிகம் விரும்பி படித்த வேதியியலில் அதிக மதிப்பெண் கிடைத்தது.
இயற்பியல், விலங்கியல் பகுதியிலும் சரியாக விடையளித்ததால் தேர்வில் 'நெகட்டிவ்'மதிப்பெண் கிடைக்காமல் பார்த்துக்கொண்டேன். இத்தேர்வு கஷ்டம் என மாணவர்களிடம் பரவலான கருத்து உள்ளது. அது தவறு. இஷ்டப்பட்டு படித்தால் எதுவும் கஷ்டமில்லை. நீட் தேர்வுக்கு திட்டமிட்டு தயாரானால் 'மெரிட்டில்' மருத்துவ படிப்பிற்கு தேர்வாகலாம்.
8 மணி நேரம் படிப்பு
வைஷ்ணவி, ரிசர்வ்லைன்: நரிமேடு கே.வி., பள்ளியில் படித்தேன். 648 மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளியில் கோச்சிங் கொடுத்தாலும் தனியார் கோச்சிங் சென்டரிலும் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. இந்தாண்டு தினமலர் நடத்திய மாதிரி 'நீட்' தேர்வில் பங்கேற்று 534 மதிப்பெண்கள் பெற்று 'டாப் 20' மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றேன்.
பயாலஜி பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்து அதிக மதிப்பெண் பெற்றேன். இரவு 4 மணிநேரம், பகலில் 4 மணிநேரம் இத்தேர்வுக்காக ஒதுக்கி படித்தேன். தேர்வு கடினம் இல்லை. எளிதில் தேர்ச்சி பெறலாம்.
கை கொடுத்த கைடு
ரக் ஷனா, மீனாம்பாள் நகர்: சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் படித்தேன். 612 மதிப்பெண்கள் பெற்று அரசு, உதவிபெறும் பள்ளிகளில் முதலிடம் பிடித்தேன். அரசு ஏற்பாடு செய்த கோச்சிங் மையத்தில் சேர்ந்து படித்தேன். பாடவாரியாக அனுபவம்வாய்ந்த ஆசிரியர்கள் பயிற்சி அளித்தது பயனுள்ளதாக இருந்தது. என்.சி.இ.ஆர்.டி., தரத்திலான சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டன. அதில் இருந்து பெரும்பாலான வினாக்கள் தேர்வில் கேட்கப்பட்டன.
விலங்கியல் பகுதியில் மட்டுமே 360க்கு 330 மதிப்பெண் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளாக தினமும் 5 மணிநேரம் 'நீட்' தேர்வுக்காக படித்தேன். இத்தேர்வு கடினமில்லை. திட்டமிட்டால் வெற்றி சாத்தியம்; டாக்டர் கனவும் நனவாகும்.
இவ்வாறு கூறினர்.