/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒப்பந்தபண்ணைய முறையில் நாற்றாங்கால் தயாரிப்பு பணி
/
ஒப்பந்தபண்ணைய முறையில் நாற்றாங்கால் தயாரிப்பு பணி
ADDED : பிப் 28, 2025 06:14 AM
மதுரை: மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மூலம் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் நாற்றாங்கால் தயாரிக்க விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 20 ஏக்கருக்கு தேவையான நாற்றாங்கால் தயாரிப்பு பணியை ஆய்வு செய்த துறையின் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது:
இத்துறையின் கீழ் மதுரையில் 15 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்படுத்தப்படுகின்றன. செல்லம்பட்டி தெற்காறு ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்களை வழங்கி அறுவடையின் போது விளை பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்தது.
அடுத்த கட்டமாக கோடை பருவத்தை முன்னிட்டு செல்லம்பட்டி வட்டார விவசாயிகளின் 200 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் நாற்றாங்கால் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுடன் ஒப்பந்த பண்ணைய முறையில் மகேந்திரா 606 நெல் ரகத்தை நடவு முதல் அறுவடை வரை இயந்திர முறையில் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. தற்போது 20 ஏக்கருக்கான நடவிற்கு தேவைப்படும் நாற்றாங்கால் தயாரிப்பில் விவசாயிகள் மூவேந்திரன், பாண்டி, சோலை ஈடுபட்டுள்ளனர்.
விதை, உரம், பூச்சிகொல்லி, களைக்கொல்லி, ட்ரோன் கண்காணிப்பு உட்பட அனைத்து பண்ணைய இயந்திரங்களையும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமே பொறுப்பேற்கிறது.
இதன் மூலம் தனித்தனி விவசாயிகளுக்கான உற்பத்தி செலவு குறைவதோடு வேலையாட்கள் பற்றாக்குறை பிரச்னையும் தீரும் என்றார்.
வேளாண் அலுவலர்கள் மீனா, சர்மிளா, நிறுவன சி.இ.ஓ., கவிகரன், இயக்குநர்கள் ரஞ்சித்குமார், பாண்டிகுமார் உடன் இருந்தனர்.