ADDED : செப் 16, 2026 03:20 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே உச்சபட்டி ஊராட்சி பள்ளக்கா புதுப்பட்டியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இந்த குழாய் வழியாக 14 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழாய் பதிக்கும் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்ததுடன், குழாய் பதிப்பதை தடுத்துள்ளார். இதனால் குழாய் பதிக்கும் பணிகள் பாதித்தது. கிராமத்தினர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளிக்கும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அந்த கிராம பெண்கள் இந்திய கம்யூ., கட்சி நிர்வாகி சந்தனம் தலைமையில் காலிகுடங்களுடன் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகளை கண்டித்தும், ஆக்கிரமிப்பை உடனே அகற்றி அவசிய தேவையான தண்ணீரை உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவும் கோஷம் எழுப்பினார். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் சென்றனர்.
