பஸ் வசதி வேண்டும்
சிட்டம்பட்டி, பூசாரிப்பட்டி, லட்சுமிபுரத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு போதிய பஸ்கள் இல்லை. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மேலுாரில் இருந்து தெற்கு தெரு லட்சுமிபுரம், கள்ளந்திரி வழியாக கூடுதல் சிட்டி பஸ்களை இயக்க வேண்டும்.
- பாண்டியன், லட்சுமிபுரம்.
தோண்டிய குழியை மூடுங்க
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜானகி நாராயணி தெருவில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டினர். பணி முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் தோண்டிய குழியை மூடவில்லை. ரோட்டின் நடுவில் உள்ளதால் மாணவர்கள், பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையுள்ளது. குழியை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- அனிபா, எஸ்.எஸ்.காலனி.
தெப்பக்குளத்தை நிரப்புங்க
மதுரை தெப்பக்குளத்தில் வெயிலின் தாக்கத்தால் நாளுக்கு நாள் தண்ணீர் குறைகிறது. இதனால் கோடையில் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளது. எனவே வரத்துக் கால்வாய்களை துார்வாரி வைகையில் இருந்து தண்ணீரை மடைமாற்றி தெப்பக்குளத்தை நிரப்ப வேண்டும்.
- குமார், தெப்பக்குளம்.
ரோட்டில் மின் கேபிள்
வடக்கு மாசி வீதியில் நடைபாதை ஒட்டி பதித்த ஸ்மார்ட் சிட்டி விளக்கு மின் கேபிள்கள் மண் கலவை பெயர்ந்து ரோட்டில் கிடக்கிறது. பாதசாரிகள் தடுக்கி விழும் நிலையுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெற்றி, வடக்கு மாசி வீதி.
கொசு உற்பத்தி
மதுரை ரயில்வே ஸ்டேஷன் எதிரே ராணி மங்கம்மாள் சத்திரம் பின்புற வாசலில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. கொசுக்களுக்காக வீடுவீடாக சென்று அபராதம் விதிக்கும் மாநகராட்சி அலுவலகத்திலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அப்பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெங்கடேஷ், எல்லீஸ் நகர்.
பறக்கும் மசாலா
திருநகர் 2 முதல் 3வது நிறுத்தம் வரை ரோட்டோர ஓட்டல்களில் துரித உணவுத் தயாரிக்கின்றனர். அந்நேரத்தில் வாகனங்களில் செல்வோரின் கண்ணில் மசாலா பொருட்கள் பறந்து வந்து விழுகிறது. இதனால் பலர் விபத்தில் சிக்குகின்றனர். அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டல்களில் மறைவு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பழனிவேல், திருநகர்.