/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெயருடன் பிறப்பு சான்று பெற டிச.31 வரை வாய்ப்பு
/
பெயருடன் பிறப்பு சான்று பெற டிச.31 வரை வாய்ப்பு
ADDED : ஆக 15, 2024 03:51 AM
மதுரை : பதினைந்து ஆண்டுகளாக பதிவு செய்யாத குழந்தைகளுக்கு பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு இந்தாண்டு டிச.,31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ அத்தாட்சி. ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்திருந்தால், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்த நாளில் இருந்து, 12 மாதங்களுக்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்யலாம்.
12 மாதங்களுக்குப் பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 தாமத கட்டணம் செலுத்தி, பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
தற்போது இதற்கும் தீர்வாக பிறப்பு, இறப்பு விதிகள் 2000ல் தேவையான திருத்தம் செய்து மேலும் 5 ஆண்டுகள் (1.1.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்படாது.
1.1.2000க்கு முன்பு பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000க்கு பின்னர் 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 கடைசி நாள். எனவே இந்த நாளுக்குள் பிறப்பு பதிவு செய்துள்ள ஊராட்சி, பேரூராட்சி பகுதியில் நடந்த நிகழ்வுகளுக்கு அப்பகுதி சார்பதிவாளர் அலுவலகத்திலும் அல்லது நகராட்சி, மாநகராட்சியிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.