/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு விழாவில் அதிகாரி மீது 'பாய்ந்த' பாண்டியன்
/
அரசு விழாவில் அதிகாரி மீது 'பாய்ந்த' பாண்டியன்
ADDED : ஆக 10, 2024 05:29 AM
மதுரை: மதுரைக் கல்லுாரியில் நடந்த 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்க விழாவில் மனைவியை 'மண்டல தலைவர்' என குறிப்பிடாமல், கவுன்சிலர் என குறிப்பிட்டதால் ஆத்திரமுற்ற முன்னாள் தி.மு.க., துணைமேயர் பாண்டியன் அதிகாரிகள், ஆசிரியர்களிடம் கோபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விழா முடிந்ததும் நன்றி தெரிவித்து சமூக நலத்துறை அலுவலர் காந்திமதி பேசினார். அப்போது மண்டல தலைவர் பாண்டிச்செல்வியை, கவுன்சிலர் என குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த பாண்டியன், விழா முடிந்ததும் காந்திமதி, ஆசிரியர்கள் ஆகியோரை 'மண்டல தலைவரை எப்படி கவுன்சிலர்' என குறிப்பிடலாம் என கோபமுற்றார். இதையடுத்து காந்திமதி, ஆசிரியர்கள் ஆகியோர் 'தவறாக கூறிவிட்டோம்' என வருத்தம் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து பாண்டியன் மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக நலத்துறை அதிகாரி காந்திமதி கூறுகையில் இது தெரியாமல் நடந்தது. எழுதிக்கொடுத்ததை தான் வாசித்தேன். இதுகுறித்து அவரிடமே விளக்கம் கொடுத்துவிட்டேன். வேறு ஒன்றுமில்லை என்றார்.
பாண்டியன் ஏற்கனவே பெண் கவுன்சிலர், பில் கலெக்டர் ஆகியோரை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண் கவுன்சிலர் விவகாரத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் மனைவியுடன் பங்கேற்று அதிகாரியிடம் கோபமடைந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

