/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுதந்திர தின மியூசியத்திற்கு மக்கள் உதவலாம்
/
சுதந்திர தின மியூசியத்திற்கு மக்கள் உதவலாம்
ADDED : ஏப் 28, 2024 03:57 AM
மதுரை : சென்னையில் அமைய உள்ள சுதந்திர தின மியூசியத்திற்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழங்கால, பாரம்பரிய பொருட்களை தந்து உதவலாம் என மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின மியூசியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையின் எதிரில் உள்ள ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த மியூசியம் அமையவுள்ளது. பொதுமக்கள் வழங்கும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள், ஜெயில் வில்லை, ராட்டை, பட்டயங்கள், ஐ.என்.ஏ., சீருடைகள், அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள்போன்றவற்றை மியூசியத்திற்கு நன்கொடையாக அளிக்கலாம்.
தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு மியூசியத்தில் நேரிடையாக வழங்கலாம். வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் மியூசிய ஆணையரால் வழங்கப்படும்.
அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம் பெறும் என்றார்.

