ADDED : மே 29, 2024 04:41 AM
திருப்பரங்குன்றம் : மதுரை மாநகராட்சி 99வது வார்டு சந்திராபாளையத்தில் 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் தலையாய பிரச்னை கழிவுநீர்தான். நான்கு தெருக்களிலும் உள்ள வீடுகளுக்கு முன்பும், மெயின் தெருவிலும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன.
இக்கழிவு நீர் கால்வாய்களை 15 நாட்கள் அல்லது மாதம் ஒருமுறையே சுத்தம் செய்கின்றனர். கால்வாய்க்குள் இருக்கும் கழிவை அள்ளி கரைமீது வைத்துச் செல்கின்றனர். சில நாட்களுக்குபின்பு அவற்றை எடுக்க வரும்போது, பாதிக்கும் மேலான கழிவுகள் மீண்டும் கால்வாய்க்குள் விழுந்து கிடக்கிறது.
இதனால் பணிகள் நடந்தும் பயனற்ற நிலையே உள்ளது. மேலும் கால்வாயின் பல இடங்களில் அடைப்பு ஏற்படுகிறது. தாழ்வான பகுதி வீடுகளின் முன்புள்ள கால்வாய் நிரம்பி நிற்கிறது. கழிவு நீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை பரப்புகின்றன. கொசு மருந்து தெளிப்பதே இல்லை. கால்வாயை முழுமையாக துார்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.