ADDED : செப் 03, 2024 04:37 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த மனு: கடந்த 2011 ல் பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான அத்வானி மதுரை திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாக ரதயாத்திரை சென்றார். அதனை சீர்குலைக்க ஆலம்பட்டி பாலத்தில் எலக்ட்ரோ ஜெல் வகை சேர்ந்த பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. தகுந்த நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரை கைது செய்தனர். இந்த வழக்கு 13 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதில் தொடர்புள்ள சில சாட்சிகள் இறந்துவிட்டனர். பல சாட்சிகள் வெளியூரில் உயிர் பயத்துடன் வசிக்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் குற்றவாளிகள் தப்ப வாய்ப்பு உள்ளது. எனவே அந்த சாட்சியங்களை கண்டறிந்து தகுந்த பாதுகாப்பு அளித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.