/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களுக்கு பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைப்பது போலீஸ் 'கையில்' ; காத்திருக்குது மாநகராட்சி
/
மக்களுக்கு பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைப்பது போலீஸ் 'கையில்' ; காத்திருக்குது மாநகராட்சி
மக்களுக்கு பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைப்பது போலீஸ் 'கையில்' ; காத்திருக்குது மாநகராட்சி
மக்களுக்கு பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைப்பது போலீஸ் 'கையில்' ; காத்திருக்குது மாநகராட்சி
ADDED : மே 25, 2024 05:44 AM

மதுரை : மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ரூ.1295 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்ற நிலையில், முக்கிய ரோடுகள் சந்திப்பின் வழியே தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் 'பெண்டிங்' உள்ளது. இப்பணியின்போது போக்குவரத்து பிரச்னை கருதி போலீஸ் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி வழங்க போலீஸ் இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் தேவையாக உள்ள 125 எம்.எல்.டி., குடிநீர் வழங்குவதற்காக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்து, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. 125 மில்லியன் லிட்டர் நீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு 60 கி.மீ., துாரம் மெகா குழாய்கள் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நீரை புதிதாக கட்டப்பட்ட 38 மேல்நிலை தொட்டிகளில் ஜனவரியில் ஏற்றி நீர் அழுத்தம், கசிவு பரிசோதனைகளையும் (ஹைட்ரோ டெஸ்ட்) மாநகராட்சி முடித்துள்ளது. ஐந்தாவது கட்டமாக டி.வி.எஸ்., நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் குழாய்கள் பதித்து வீடுகளுக்கு இணைக்க வேண்டியுள்ளது. தவிர குழாய்கள் இணைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளன. மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து தண்ணீர் திறந்து வீடுகளுக்கு குழாய் வழி சரியாக செல்கிறதா என்ற சோதனை செய்வது உள்ளிட்ட 10 சதவீதம் பணிகள் மட்டும் இன்னும் நிலுவையில் உள்ளது.
நிலுவை பணிகளை முடிக்க மாநகராட்சிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட பிரதான ரோடுகள் சந்திப்பில் ரோடுகளை கடந்து செல்லும் வகையில் குழி தோண்டி குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு செல்ல வேண்டிய இணைப்புகளுடன் இணைக்க வேண்டியுள்ளது. இப்பணிகளுக்கு போலீஸ் அனுமதி தேவை. ஆனால் பல நாட்களை கடந்தும் அதற்கான அனுமதியை பெறுவதில் மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரோடுகளை தோண்டினால் அப்பகுதியில் ஓரிரு நாட்களில் போக்குவரத்து துண்டிக்கப்படும். வாகன போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட வேண்டும். இதற்கு போலீசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.
அவர்கள் பாதுகாப்பும் அவசியம். சித்திரை திருவிழா, லோக்சபா தேர்தல் என அடுத்தடுத்து வந்ததால் போலீஸ் அனுமதி கிடைப்பதும் பெரும் சவாலாக இருந்தது. மதுரை வரை கொண்டுவரப்பட்ட குடிநீரை மேல்நிலை தொட்டிகளில் நிரப்பியும் வினியோகிக்க முடியவில்லை. இரவில் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குடிநீர் வினியோகத்தை அத்தியாவசியப் பணியாக நினைத்து போலீஸ் அனுமதி வழங்கினால் மாநகராட்சி இப்பணிகளை ஜரூராக முடித்து, வீடுகளுக்கு குடிநீர் வினியோகத்தை விரைவில் துவக்கி விடும் என்றார்.

