ADDED : ஜூலை 04, 2024 01:41 AM
பூஜாரி கொலை
செக்கானுாரணி: சொக்கநாதபுரம் பவுன்ராஜ் 54. கோயில் பூஜாரி. கோயில் அருகே வசிப்பவர் சிவபாண்டி மகன் முருகன் 23. இவர் தனக்குரிய நிலத்தின் அளவு குறைவதாகவும், அந்த இடம் கோயில் நிலத்திற்குள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை பவுன்ராஜ் மறுத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் கோயிலுக்கு வந்த பவுன்ராஜை வழிமறித்து அரிவாளால் முருகன் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். செக்கானுாரணி போலீசில் முருகன் சரணடைந்தார். உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமார் விசாரித்தார். இன்ஸ்பெக்டர் திலகராணி கைது செய்தார்.
ஓடும் பஸ்சில் வழிப்பறி
மதுரை: தஞ்சாவூர் அதிராமபட்டினம் செந்தில்குமார் 51. நேற்றுமுன்தினம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஸ்டாப்பில் இருந்து கிருஷ்ணன்கோவில் செல்ல பஸ்சில் ஏறினார். அப்போது அவருடன் ஏறிய நபர் சிறிது நேரத்தில் செந்தில்குமார் சட்டைப்பையில் இருந்த அலைபேசியை பறித்துக்கொண்டு ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தப்பினார். செந்தில்குமார் துரத்தி பிடித்து விசாரித்ததில் அவர் ஆந்திராவைச் சேர்ந்த தேஜூ ராஜா 37, எனத்தெரிந்தது. புதுார் போலீசார் கைது செய்தனர்.
அலைபேசி டவர்கள் திருட்டு
மதுரை: தனியார் அலைபேசி நிறுவனத்திற்காக 'ஜில்' என்ற நிறுவனம் மதுரை பரசுராம்பட்டி, திருப்பாலை இ.பி., காலனியில் அலைபேசி டவர்களை 2017 ல் அமைத்து கொடுத்தது. இந்நிலையில் அந்த டவர்களில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை. ஆய்வுசெய்தபோது அலைபேசி டவர்கள் இல்லை எனத்தெரிந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் திருடினார்களா என திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். இதன் மொத்த மதிப்பு ரூ.14.80 லட்சம்.
55 பவுன் நகைகள் கொள்ளை
மேலுார்: மில்கேட் செந்தில் 40. வெளிநாடு சென்று திரும்பியவர். நேற்று முன்தினம் காலை குடும்பத்தினருடன் வெளியே சென்றவர் மதியம் வீடு திரும்பினார். வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 55 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.
சுவர் இடிந்து மூதாட்டி பலி
அலங்காநல்லுார்: மெய்யப்பன்பட்டி சந்தானம் மனைவி காத்தம்மாள் 70. மண் சுவரில் ஆஷ்பெட்டாஸ் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
கடனால் தற்கொலை
உசிலம்பட்டி: உத்தப்பநாயக்கனூர் அருகே கே.பெருமாள்பட்டி விவசாயி ஒச்சாத்தேவர் 55. ஜூலை 2ல், தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். பேரையூர் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
வாலிபர் தற்கொலை
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே தேனுார் கண்ணன் 53, கட்டட தொழிலாளி. டிப்ளமோ முடித்துள்ள இவரது 3வது மகன் பிரவீன்குமார் 20, அவ்வப்போது தந்தையுடன் வேலைக்கு சென்று வந்தார். ஆறுமாதங்களாக வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்து வந்த பிரவீன்குமார், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆயுதங்களுடன் நால்வர் கைது
சோழவந்தான்: பேட்டை வைகை ஆற்றுப்பகுதியில் எஸ்.ஐ.,சேகர், போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அங்கு ஆயுதங்களுடன் இருந்த சந்தன மாரியம்மன் கோயில் தெரு இளங்கோவன் 49, பாண்டிஸ்வரன் 20, ஈஸ்வரன் 20, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். விசாரணையில் கடந்த மாதம் மதுரை கோவில்பாப்பாகுடியில் சூர்யா கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவது, வழக்கு செலவுக்கு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரிந்தது. அவர்களிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பிய அழகு முருகனை தேடி வருகின்றனர்.