ADDED : ஜூலை 11, 2024 05:23 AM

பெண் வெட்டிக்கொலை
மதுரை: சிலைமான் பகுதியில் மதுரை - ராமநாதபுரம் ரிங்ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தோப்பில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். தோப்புக்குள் மின்சார மோட்டார் அறை அருகே கிடந்த 50 வயது மதிக்கத்தக்க அவரது தலையில் வெட்டுக்காயம் இருந்தது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர். போலீசார் கூறுகையில், 'யாரேனும் இப்பகுதிக்கு அழைத்து வந்து அவருடன் இரவில் தங்கியிருக்கலாம். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம்' என்றனர். இப்பகுதியில் காணாமல் போன பெண்களின் விபரத்தை சேகரித்து, சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாள் வைத்திருந்தவர் கைது
மேலுார்: பிஸ்மில்லா நகரில் மூன்று பேர் வாள் (பட்டா கத்தி) வைத்து, பொதுமக்களை மிரட்டுவதாக எஸ்.ஐ., ரமேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது, இருவர் தப்பினர். அங்கிருந்த மேலுார் மணியக்கார தெரு சுதர்சனை 22, கைது செய்து விசாரிக்கின்றனர்.
அரிவாள் வெட்டு
மேலுார்: மல்லிகை நகர் கிஷோர் குமார் 26. இவருக்கும் நாகம்மாள் கோயில் தெரு விவேக், நொண்டிகோவில்பட்டி சக்தி உள்ளிட்ட மூவருக்கும் அதே பகுதி கோயில் திருவிழாவில் பிளக்ஸ் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. வெளிநாட்டில் வேலைக்கு சென்று திரும்பிய கிஷோர்குமாரை நேற்று முன்தினம் மாலை விவேக் தலைமையில் மூவர் அரிவாளால் வெட்டி தப்பினர். காயமடைந்த அவர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது
மேலுார் : நேற்று முன்தினம் சிவகங்கை - மேலுார் வந்த அரசு டவுன்பஸ்சில் படிக்கட்டில் நின்றவரை கண்டக்டர் ராமன் இறக்கிவிட்டார். ஆத்திரமடைந்த அந்த நபர் கல்லால் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து நேற்று மேலுார் முகம்மதியர்புரம் அசாருதீனை 21, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பணம் பறித்த மூவர் கைது
மேலுார் : பிஸ்மில்லா நகரில் மஸ்தான் அலி 32, குடும்பத்துடன் வசிக்கிறார். அங்கு வந்த மூவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மேலுார் முகம்மதியர்புரம் செந்தில்ராஜா 20, காந்திநகர் ஷ்யாம் டேனியல் 22, மில்கேட் தீபன்ராஜ் 31, உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.
ஏ.டி.எம்., மையத்தில் கள்ள நோட்டுகள்
மதுரை: அண்ணா நகர் வண்டியூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. இங்கு ரூ. 33ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பையா என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து 66 ரூ.500 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தெரிந்தது. அவர் கணக்கில் யார் செலுத்தியது எனத் தெரியவில்லை. அண்ணாநகர் வண்டியூர் மெயின் ரோடு வங்கிக் கிளை மேலாளர் கணேஷ் பாண்டியன், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
மூவர் கைது
மதுரை: ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ராமையா தெரு அப்பள கம்பெனி அருகே மூன்று நபர்கள் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். அவர்கள் ஜெய்ஹிந்துபுரம் வீரபாண்டி 25, ஜீவாநகர் கார்த்திக் கணேஷ் 30, மற்றும் 17 வயது சிறுவன் எனவும், அவர்களுக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்யும் திட்டத்தில் இருந்ததும் விசாரணையில் தெரிந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
கொத்தனார் மர்ம சாவு
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பாண்டி கோவில் தெருவை சேர்ந்த கொத்தனார் சென்னையன் 35. மது குடிக்கும் பழக்கத்தால் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவர் மதுரைக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மதுரை பைபாஸ் ரோடு ராம்நகர் காம்ப்ளக்ஸ் ஒன்றில் அழுகிய நிலையில் உடல் கிடந்தது. போலீஸ் விசாரணையில் அது சென்னையன் என தெரிந்தது. தற்கொலை செய்தாரா, கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரர் மனைவி பலி
மதுரை: ரிசர்வ் லையன் ஆறாவது பட்டாலியன் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் அழகுமுருகன். இவரது மனைவி ரேணுகாதேவி 22. அழகுமுருகன் சென்னை ஆயுதப்படையில் உள்ளார். ரேணுகா தேவி, அசாம் ரைபிள் கான்ஸ்டபிள் பணிக்கு தேர்வானார். அதற்கான உத்தரவு வந்த நிலையில் 'வேலைக்கு செல்ல வேண்டாம்' என அழகுமுருகன் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் எலி பேஸ்ட்டை தின்று மயங்கினார். அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
'போக்சோ' கைதி பலி
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் 39. இவர், 2023ல் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கிட்னி பிரச்னையால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயிலர் கண்ணன் புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.